இங்கிலாந்து வளம்பெற பெரும் பங்காற்றிய இந்தியர்கள்... பல்டி அடித்த இந்திய வம்சாவளி பெண் மந்திரி

இந்திய வம்சாவளி பெண் மந்திரியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இங்கிலாந்து வளம்பெற இந்தியர்கள் பெரும் பங்காற்றி உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்து வளம்பெற பெரும் பங்காற்றிய இந்தியர்கள்... பல்டி அடித்த இந்திய வம்சாவளி பெண் மந்திரி
Published on

லண்டன்,

இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்று கொண்ட லிஸ் டிரஸ் அமைச்சரவையில், இந்திய வம்சாவளி பெண்ணான சுவெல்லா பிரேவர்மென் உள்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.

இவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். தமிழகத்தின் இந்து பெண்ணான உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர் பிரேவர்மென்.

இந்நிலையில், தி சன் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியொன்றில், இங்கிலாந்து நாட்டில் குறைந்த திறனுடைய அகதிகள், சர்வதேச மாணவர்கள் ஆகியோர் அதிக அளவில் உள்ளனர். இவர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைந்து உள்ளது.

இந்த சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் வருகை தருவதுடன், அவர்கள் தங்களை சார்ந்து உள்ளனர். இதனால், அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அல்லது குறைவான திறன் கொண்ட வேலையில் ஈடுபடுகின்றனர். தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் பங்காற்றுவதும் இல்லை என கூறியுள்ளார்.

அதனால், இங்கிலாந்து நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க, புலம்பெயர்வோர் எண்ணிக்கையை குறைக்கவும் மற்றும் குடியுரிமை கொள்கையை மறுஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்சின் அரசில் உள்ள அனைத்து மூத்த மந்திரிகளும் புலம்பெயர்வோரை குறைக்கும் தங்களது நோக்கங்களை பகிர்ந்து கொண்டனர் என்றும் பிரேவர்மேன் கூறியது சர்ச்சை ஏற்படுத்தியது. இதனால், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு வேலை தேடி செல்வது பாதிக்கப்பட கூடிய சூழலும் ஏற்பட்டு உள்ளது.

இதேபோன்று, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த வர்த்தக ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டு சமீபத்தில் அவர் பேசும்போது, விசா காலக்கெடு முடிந்த பின்பும், இங்கிலாந்தில் தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து மக்கள் ஒன்றும் இங்கிலாந்து எல்லைகளை இந்தியர்களுக்கு திறந்து விடுவதற்காக, பிரெக்சிட்டில் வாக்களிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தியர்களுக்கு எதிரான அவரது இந்த பேச்சுக்கு இந்திய தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசும் எதிர்வினையாற்றியது.

இந்நிலையில், பிரேவர்மேன் அப்படியே பல்டி அடித்து, இந்தியாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். தீபாவளியை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்திய வம்சாவளி மக்களாலேயே இங்கிலாந்தின் வளம் பெருகியுள்ளது.

இந்திய சமூக உறுப்பினராக நான் இருப்பது பெருமைக்குரிய விசயம். இங்கிலாந்தின் கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை, தங்கியுள்ள இந்தியர்கள் நாட்டை அலங்கரித்து உள்ளனர். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா, இங்கிலாந்து இடையேயான நட்புறவை மேலும் ஆழப்படுத்த மற்றும் இரு நாடுகளின் பொருளாதாரம் வலுப்படுவதற்கான திட்டங்கள் உள்ளன. பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புடன் செயல்படும் என கூறியுள்ளார்.

இரு நாட்டு உறவுகள் எப்போதும் புதிதாகவும், துடிப்புடனும் இருக்கும். இந்தியா எனது இதயத்தில், ஆன்மாவில் மற்றும் ரத்தத்தில் உள்ளது. எனது குடும்பத்தில் பெற்றோர் இருவரும் இந்தியர்கள். தந்தையின் முன்னோர்கள், குடும்ப உறுப்பினர்கள் கோவாவிலும், தாய் சென்னையை சேர்ந்தவர் என்பதிலும் பெருமை கொள்கிறேன் என்று அவர் இந்தியாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com