இந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு

சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததற்கு அந்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்தியாவின் நடவடிக்கை உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் வகையில் உள்ளது: சீனா குற்றச்சாட்டு
Published on

பெய்ஜிங்,

லடாக் எல்லையில் இந்தியா- சீன ராணுவத்தினர் இடையே கடும் கைகலப்பு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் பலியாகினார். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே தொடர்ந்து மோதல் வலுத்து வருகிறது. எனினும், தற்போது பதற்றத்தை தணிக்கும் வகையில் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தேச பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படலாம் எனக் கருதி சீன நாட்டு செயலிகளான டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 வகையான செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. இந்திய அரசின் நடவடிக்கைக்கு சீனா நேற்று கடும் அதிருப்தி தெரிவித்தது.

இந்த நிலையில், தேர்வு செய்து செயலிகளுக்கு தடை விதிப்பது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் செயல் என்று சீனா கூறியுள்ளது. இது தொடர்பாக என்று சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் கூறுகையில், குறிப்பிட்ட சில சீன செயலிகளுக்கு ஒருதலைபட்சமாக இந்தியா தடை விதித்து இருப்பது தெளிவற்றது மற்றும் பொருத்தமற்றதாகும். நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறை தேவைகளுக்கு எதிரான செயல்பாடாக அமைந்துள்ளது.

இந்தியாவின் நடவடிக்கை தேசிய பாதுகாப்பு விதிவிலக்குகளை துஷ்பிரயோகம் செய்யும் செயல் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறும் செயல் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. பொது மற்றும் சர்வதேச வர்த்தகம், இ வணிகம் ஆகியவற்றுக்கு எதிராகவும் இது உள்ளது. நுகர்வோர் நலன் மற்றும் சந்தை போட்டிக்கும் இந்த நடவடிக்கை உகந்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com