விபத்தில் சிக்கிய இந்தோனேசிய விமானம் முந்தைய பயணத்தின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்தது?

இந்தோனேசியாவில் கடலில் வீழ்ந்த விமானத்தில் முந்தைய பயணத்தின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கிய இந்தோனேசிய விமானம் முந்தைய பயணத்தின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருந்தது?
Published on

ஜகார்தா

இந்தோனேசியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.

வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. அதில் 8 பணிப்பெண்கள், 2 விமானிகள், 2 குழந்தைகள், ஒரு கைக்குழந்தை உட்பட 189 பேர் இருந்தனர். விமானம், 7.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதிக்கு சென்றடைய வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததும் அதில் பயணித்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூடினர்.

இந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது, தெரியவந்தது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்தோனேசிய கடலில் மிதக்கின்றன. அவற்றை மீட்கும் பணி நடந்து வருகிறது விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த விமானம் இதற்கு முன்னர் டென்பசர் நகரிலிருந்து ஜகர்தாவில் உள்ள செங்கரங்-க்கு பறந்துள்ளது. அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் நடைமுறைப்படி சரி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை லயன் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எட்வர்ட் கூறியுள்ளார். இந்த விபத்துக்கும் முன்னர் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்படவுள்ளது. லயன் நிறுவனம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் உட்பட அதே மாடலில் 11 விமானங்களை வைத்துள்ளது. இந்த விபத்து காரணமாக மற்ற விமானங்களின் இயக்கம் நிறுத்தப்பட மாட்டாது என எட்வர்ட் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com