7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபரை பொதுஇடத்தில் தூக்கிலிட்டது ஈரான்

ஈரானில் 7-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபருக்கு பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபரை பொதுஇடத்தில் தூக்கிலிட்டது ஈரான்
Published on

தெஹ்ரான்,

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில், குற்றச்செயல்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த வகையில், 7 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை பொது இடத்தில் தூக்கிட்டு ஈரானில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஈரான் மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- இஸ்மாயில் ஜபார்சதே என்ற நபர், தந்தையுடன் மார்கெட் சென்ற 7-வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்தது. ஈரானின் அர்தேபி மாகாணத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. ஈரான் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில், அந்நாட்டு அதிபர் ஹாசன் ரவுஹானி தலையிட்டு குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் இந்த குற்றம் மிகவும் பயங்கரமானது எனவும் தெரிவித்தார்.

வழக்கு விசாரணை முடிவு பெற்றதையடுத்து கடந்த 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதையடுத்து,குற்றவாளிக்கு பொது இடத்தில் மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண்ணை கொலை செய்ததையும் குற்றவாளி ஒப்புக்கொண்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளில் முதல் 5 இடங்களில் ஈரானும் உள்ளது. ஈரானில் போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் பாலியல் பலாத்காரம், தற்பால் சேர்க்கை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஈரானில் மரண தண்டனை அளவுக்கதிமாக நிறைவேற்றப்படுவதாக மனித உரிமைகள் அமைப்பும் எச்சரித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com