கொரோனா பாதிப்பு; இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு; இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை
Published on

டோக்கியோ,

உலக அளவில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கானோரை பலி கொண்டுள்ள இந்த பாதிப்பு, ஆசிய பகுதியில் அமைந்த ஜப்பான் நாட்டில் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

அந்நாட்டில், இதுவரை 16 ஆயிரத்து 628 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்களில் 13 ஆயிரத்து 612 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். 851 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஊரடங்கு உத்தரவை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதனால் இந்த தளர்வு அறிவிக்கப்படுகிறது என அவர் கூறினார்.

எனினும், ஊரடங்கு தளர்விற்கு பின்பும், மக்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் மற்றொரு நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதித்து உள்ளார்.

ஜப்பானில் 188 நாடுகளை சேர்ந்த மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், அர்ஜெண்டினா, வங்காளதேசம், எல் சால்வடார், கானா, கினியா, இந்தியா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 11 நாடுகளும் சேர்க்கப்பட்டு உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன், தனது நாட்டு குடிமக்கள் இந்த 11 நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தி இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com