

வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் பைடன் கேபிடால் நகரில் அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அவர் தனது உரையின்போது, நாட்டை கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியபோதும் மற்றும் உக்ரைன் மீது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படையெடுத்தபோதும், அமெரிக்காவின் பொருளாதாரம் ஆனது, பூமியில் வேறு எந்த நாட்டையும் விட வளர்ச்சி நிலையில் சிறப்பாக உள்ளது என குறிப்பிட்டார்.
அமெரிக்க வரலாறு என்பது வளர்ச்சி மற்றும் மீள்உருவாக்கத்திற்கான வரலாறு என அதிபர் பைடன் தனது உரையின்போது பேசினார் என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
நேற்றிரவில் பைடன் இந்த உரையை தொடங்கும் முன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் கணவருக்கு அதிபரின் மனைவியான டாக்டர் ஜில் பைடன் உதட்டு முத்தம் கொடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது. அவரது இந்த செயலுக்கு சுற்றியிருந்த உறுப்பினர்கள் பலரும் பலத்த கைத்தட்டலை வழங்கினர்.
இந்த சம்பவம் டுவிட்டர் வழியே வைரலானது. இதற்கு பலரும் பல விமர்சனங்களை தெரிவித்து உள்ளனர். அதில் ஒருவர், ஜில் பைடன், கமலா ஹாரிசின் கணவரை உதட்டில் முத்தம் கொடுத்திருக்கிறார். இதனை நான் எதிர்பார்க்கவேயில்லை என தெரிவித்து உள்ளார்.
ஜில் உதட்டில் மட்டுமே முத்தம் கொடுத்தாரா?! என ஆச்சரிய குறியுடன் மற்றொருவர் கேள்வி கேட்டுள்ளார். டாக்டர் ஜில் மற்றும் கமலா கணவரின் முத்தத்துடன் கூட்டுக்கூட்டம் செக்சியான முறையில் தொடங்கியுள்ளது என இன்னொருவர் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை, அதிக உறுப்பினர்களுடன் குடியரசு கட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனை முன்னிட்டு அவர்களை நண்பர்களே என அழைத்து பைடன் தனது உரையை தொடங்கினார்.
அதிபர் பைடன் தனது உரையில், தான் பதவியேற்றபோது இருந்த நிலையை விட அமெரிக்க ஜனநாயகம் யாருக்கும் வளைந்து கொடாமல், முறியாமல் தற்போது சிறப்பான முறையில் உள்ளது என கூறியுள்ளார். தற்போது, கொரோனா நமது வாழ்வை கட்டுப்படுத்த போவதில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.