

லண்டன்,
தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர். கட்டிடத்தில் வெப்பம் அதிகமாக நிலவுவதால் உள்ளே செல்ல முடியாத நிலை நிலவுகிறது.
குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட தொடர்பாக பொது விசாரணைக்கு அந்நாட்டு பிரதமர் தெரசா மே உத்தரவிட்டு உள்ளார்.
தீ விபத்து நேரிட்ட பகுதிக்கு சென்று தெரசா மே பார்வையிட்டார். 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தீ எப்படி வேகமாக பரவியது என்ற விவகாரத்தில் தெரசா மேவிற்கு கடும் அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
சம்பவம் நடந்த பகுதியை பார்வையிட்ட தெரசா மே பேசுகையில், என்ன நடந்தது என்பது நமக்கு தெரியவரவேண்டும், விளக்கம் தேவையானது. உறவினர்களையும், வீட்டையும் இழந்த குடும்பங்களுக்கு நாம் கடைமைபட்டு உள்ளோம். அதன் காரணமாகவே நான் பொது விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன், நம்மால் பதில்களை பெற முடியும். உண்மையாக என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியும், என கூறிஉள்ளார். தீ விபத்து நேரிட்ட போது அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 600 பேர் இருந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. உயிர்தப்பியவர்கள் விவரமும் தெரியவரவில்லை, என உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.