

லண்டன்,
லண்டனின் லட்டிமர் சாலையில் அமைந்து உள்ள கிரென்பெல் டவர் என்ற 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணியளவில் மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. 120 வீடுகள் கொண்ட 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில் ஏற்பட்ட தீயானது மளமளவென பிற அனைத்து மாடிகளுக்கும் பரவியது. பெரும் கரும்புகை மண்டலம் உருவானது. வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் அலறியடித்துக்கொண்டு பாதுகாப்பாக வெளியேற முயற்சி செய்தார்கள். கை குழந்தைகளுடன் தாய்மார்களும் ஜன்னல் ஓர் பகுதிகளில் வந்து நின்று உதவி கோரினர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு மாடியில் தவித்த மக்களை பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
50-க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்டவர்கள் அருகே உள்ள தேவாலயத்தை தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
லண்டன் தீயணைக்கும் படையின் கமிஷனர் டேனி காட்டன் பேசுகையில், கட்டிடம் தீ பிடித்து எரிந்ததில் பலர் உயிரிழந்து விட்டனர். எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை கூற இயலாது. முன் எப்போதும் நடந்திராத ஒரு சம்பவம் இதுவாகும். எனது 29 ஆண்டு கால பணியில் இவ்வளவு பயங்கரமான தீ விபத்தை நான் கண்டது இல்லை. இந்த தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை என்றார்.
கட்டிடம் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் கட்டிடமும் வலு இழந்து விட்டது அது இடிந்து விழுந்து விடக்கூடும் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
தீ பிடித்து எரிந்த கிரென்பெல் டவர் கட்டிடத்தில் சுமார் 300 முதல் 500 பேர் வரை இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பயங்கரவாத தாக்குதல்களால் பெரும் துயரத்திற்கு உள்ளான லண்டன் இந்த பயங்கர தீ விபத்து சம்பவத்தினால் பெரிதும் துயரத்திற்கு உள்ளாகி உள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பார்த்த காட்சிகளை விவரிப்பது நெஞ்சை நொறுக்கவதாக உள்ளது.
கட்டிடத்தில் 7-வது மாடியில் வசித்த பால் முனாகர் தீ விபத்தில் இருந்து உயிர் தப்பியவர். அவர் பிபிசிக்கு அளித்து உள்ள பேட்டியில், நான் மாடி படியில் இருந்து இறங்கிய போது அங்கு தீயணைப்பு படை வீரர்கள் நின்றனர். அவர்கள் மேலே சென்று சிக்கியவர்களை வெளியே பத்திரமாக மீட்க அவர்களால் முடிந்த முயற்சிகளை செய்தார்கள், சிறப்பான பணியை செய்தார்கள், என்றார். தெருவில் நின்றவர்கள் கூறியபோதுதான் எனக்கு கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டது தெரியும், குதிக்க வேண்டாம், குதிக்க வேண்டாம் என அவர்கள் கத்தினார்கள் என்றார்.