

லண்டன்,
மேற்கு லண்டனில் உள்ள க்ரீன்பெல் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படை வீரர்கள் போராடி அணைத்தனர். கட்டிடத்தில் வெப்பம் அதிகமாக நிலவுவதால் உள்ளே செல்ல முடியாத நிலை நிலவியது. மீட்பு குழுவினர் மீட்பு பணியை இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத தெரசா மேவிற்கு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் கட்டிட தீ விபத்து விவகாரங்கள் பெரும் சவாலாக எழுந்து உள்ளது.
24 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தீ எப்படி வேகமாக பரவியது என்ற விவகாரத்தில் தெரசா மேவிற்கு கடும் அழுத்தம் ஏற்பட்டு உள்ளது.
குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட தொடர்பாக பொது விசாரணைக்கு அந்நாட்டு பிரதமர் தெரசா மே நேற்று உத்தரவிட்டு உள்ளார். தீ விபத்து நேரிட்ட பகுதிக்கு சென்று தெரசா மே பார்வையிட்டார். அப்போது அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ஏற்கனவே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தீ விபத்தில் இறந்த அனைவரையும் அடையாளம் காணமுடியாமல் போகக்கூடும் என லண்டன் காவல்துறை தெரிவித்து உள்ளது.
17 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது, ஆனால் உயிரிழப்பி எண்ணிக்கையானது 60 ஐ தாண்டும் எனவும் அச்சம் நிலவுகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக கிரிமினல் விசாரணையை தொடங்கி உள்ளதாக லண்டன் போலீஸ் தெரிவித்து உள்ளது.
லண்டன் போலீஸ் கமிஷ்னர் ஸ்டுவர்ட் கண்டியிடம் எத்தனை பேர் உயிரிழந்தனர் என கேள்வி எழுப்பிய போது, அவர் பதிலளிக்கையில் உயிரிழப்பு எண்ணிக்கையானது மூன்று இலக்க எண்ணை தொடாது என நம்புவதாக தெரிவித்தார். விசாரணை தொடர்கிறது எனவும் குறிப்பிட்டு உள்ளார். தீ விபத்து நேரிட்ட போது அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 600 பேர் இருந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. உயிர்தப்பியவர்கள் விவரமும் தெரியவரவில்லை, என உயிரிழப்பு எண்ணிக்கையானது அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.