ஏமனில் ஏவுகணை தாக்குதல்: தொழுகையில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 80 பேர் பலி

ஏமனில் ராணுவ முகாமில் அமைந்துள்ள மசூதி மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 80 பேர் பலியாகினர்.
ஏமனில் ஏவுகணை தாக்குதல்: தொழுகையில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 80 பேர் பலி
Published on

துபாய்,

ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சி படையினருக்கும் இடையே 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கிய உள்நாட்டுப்போர் இன்னும் நீடித்து வருகிறது.

அதிபர் ஆதரவு படைகளுக்கு சவுதி கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கின்றன.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுத உதவியும், நிதி உதவியும் அளித்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த உள் நாட்டுப்போரில், ஏமன் தலைநகர் சனா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் வந்தது. அதே நேரத்தில் இந்த போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரம் பேர் அப்பாவி பொது மக்கள் ஆவர். போரினால் 31 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர்.

அங்கு தலைநகர் சனாவில் இருந்து 170 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மாரிப் என்ற இடத்தில் ராணுவ முகாமில் ஒரு மசூதி இருந்து வந்தது.

அந்த மசூதியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலையில் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் படை வீரர்கள் ஏராளமாக கலந்து கொண்டிருந்தனர்.

இதை அறிந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அந்த மசூதியை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் 80 படை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, மாரிப் சிட்டி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன.

இந்த ஏவுகணை தாக்குதலுக்கு ஏமன் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பயங்கரவாதிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல் கோழைத்தனமான தாக்குதல் ஆகும். ஹவுதி பயங்கரவாதிகள் நடத்தியுள்ள இந்த தாக்குதல் அவர்கள் அமைதியை, சமாதானத்தை ஒருபோதும் விரும்புவதில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி சொல்கிறது. இதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், அழிவு, இந்த பிராந்தியத்தில் ஈரான் செய்துள்ள கைவேலை ஆகும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அதே நேரத்தில் இந்த ஏவுகணை தாக்குதல் குறித்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com