சுவிஸ் வங்கியில் பணஇருப்பு தரவரிசை: இந்தியா 88வது இடத்திற்கு சரிவு

சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போர் பற்றிய தரவரிசையில் இந்தியா 88வது இடத்திற்கு பின்தங்கி சென்றுள்ளது.
சுவிஸ் வங்கியில் பணஇருப்பு தரவரிசை: இந்தியா 88வது இடத்திற்கு சரிவு
Published on

ஜூரிச்,

இங்கிலாந்து தொடர்ந்து முதல் இடத்தினை தக்க வைத்து கொண்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத முறையிலான கறுப்பு பணத்தினை பாதுகாப்பாக இருக்கும் வகையில் சுவிஸ் வங்கி போன்ற வங்கிகளில் பதுக்குவது வழக்கம். ஏனெனில், இந்த வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் பற்றிய ரகசியத்தினை காக்கும் உறுதியை வழங்கியுள்ளது.

இந்நிலையில், சுவிஸ் வங்கியில் சந்தேகத்திற்குரிய வகையில் கறுப்பு பணம் பதுக்கியோரை கண்டறிவதற்காக இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதற்கான புதிய ஒப்பந்தம் போடப்பட்டது.

2018ல் இது நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் முதல் தகவல் பரிமாற்றம் 2019ல் நடைபெற கூடும் என்றும் சுவிட்சர்லாந்து தேசிய கவுன்சில் தெரிவித்திருந்தது.

இதனை முன்னிட்டு ஜூரிச் நகரில் இயங்கி வரும் சுவிஸ் தேசிய வங்கி சமீபத்தில், 2016 இறுதியாண்டு அடிப்படையில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அத்தகவலின்படி, சுவிஸ் வங்கியில் உள்ள மொத்த வெளிநாட்டு பணமதிப்பில் இந்தியர்களின் பணம் 0.04 சதவீதம் ஆக உள்ளது (2015ல் 0.08 சதவீதம்).

இது அந்நாட்டு பணமதிப்பின்படி 676 மில்லியன் சுவிஸ் பிராங் (ரூ.4 ஆயிரத்து 500 கோடி) ஆகும். கறுப்பு பணம் சந்தேகத்தின் அடிப்படையிலான அடுத்தடுத்த நடவடிக்கையால், தொடர்ச்சியான 3 வருடங்களில் இந்த மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்போர் தர வரிசையில் 88வது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் 61வது இடத்திலும், 2015ல் 75வது இடத்திலும் இருந்தது.

கடந்த 2007ம் ஆண்டு வரை முதல் 50 நாடுகளின் வரிசையில் இருந்த இந்தியா, 2004ம் ஆண்டில் 37வது என்ற உயரிய இடத்தில் இருந்தது.

எனினும் இந்த பணம் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கறுப்பு பணம் பற்றிய மதிப்பீடு அல்ல என்றும், சுவிஸ் வங்கிகளில் உள்ள பொறுப்புகள் அல்லது வாடிக்கையாளர்களின் பண இருப்பு மதிப்பு என்றும் சுவிஸ் தேசிய வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com