சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர் - பதற்றம் அதிகரிப்பு

சீனாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி, இன்று தைவான் சென்றுள்ளார்.
Image Courtesy : AFP
Image Courtesy : AFP
Published on

தைபெய் சிட்டி,

தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது. அதே வேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர் ஜி ஜிங்பிங், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக கூறியுள்ளார். சீனாவின் ஒரு அங்கம் தான் தைவான், எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக்கூடாது என கேட்டு கொண்டார்.

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுத்து போர் தொடுத்துள்ள நிலையில், இதே போன்ற ராணுவ நடவடிக்கையை தைவான் மீது சீனா எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது.

இதற்கிடையில் அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை நேற்றைய தினம் தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நான்சி தைவானுக்கு சென்றால் எங்களது உள் விவகாரங்களிலும் தலையிடுவது போன்றது என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.

இந்த நிலையில், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, நான்சி பெலோசி தற்போது தைவானுக்குச் சென்றுள்ளார். கடந்த 25 வருடங்களாக தைவான் மீது சீனா உரிமை கோரி வரும் நிலையில், முதல் முறையாக அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தற்போது தைவானுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநயகர் - பதற்றம் அதிகரிப்பு

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com