தானே தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பரிதாப சாவு - உக்ரைனில் சோகம்

உக்ரைனில், தானே தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தானே தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பரிதாப சாவு - உக்ரைனில் சோகம்
Published on

கீவ்,

உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கீவ்கா நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் வகையில் வித்தியாசமான சாகசத்தில் ஈடுபட முடிவு செய்தான்.

இதற்காக அவன் வீட்டிலேயே பாராசூட் ஒன்றை தயார் செய்தான். பின்னர் அந்த பாராசூட்டை பரிசோதித்து பார்க்க முடிவு செய்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்றான்.

சிறுவனின் சாகசத்தை பார்க்க அவனது தாய், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்தனர். அவர்கள் அனைவரும் சிறுவனை உற்சாகப்படுத்தியதோடு, பலர் அங்கு நடப்பதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அந்த சிறுவன் தனது இரு கைகளையும் உயர்த்தி காட்டியபடி, மாடியில் இருந்து கீழே குதித்தான்.

பின்னர் அவன் தனது பாராசூட்டை இயக்கினான். அந்த பாராசூட் சரியான நேரத்தில் விரிந்த போதிலும், முறையாக இயங்கவில்லை. இதனால் சிறுவன் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான். தன் கண் முன்னே மகன் கீழே விழுந்து உயிர் இழந்ததை கண்டு அவனது தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.

சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் சிறுவனின் விபரீத முயற்சியை தடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர் என வேதனையுடன் தெரிவித்தார்.

சிறுவன் பாராசூட்டை முறையாக தயார் செய்யாததால் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் முறையாக தயார் செய்யப்பட்ட பாராசூட்டை பயன்படுத்தி இருந்தாலும் கூட சிறுவன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com