ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்


ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
x
தினத்தந்தி 6 Aug 2024 3:10 PM IST (Updated: 6 Aug 2024 3:13 PM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி திரவுபதி முர்மு பிஜி பயணத்திற்கு பின்னர் நாளை முதல் 9-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சுவா,

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பிஜி நாட்டுக்கு அவர் நேற்று சென்றடைந்து உள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில், முர்மு அந்நாட்டு அதிபர் ரது வில்லியம் மைவாலிலி கடோனிவியர் மற்றும் பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோரை சந்தித்து இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து பிஜி தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முர்முவால், இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று உறவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்த பயணத்தின்போது, பிஜி நாட்டின் நாடாளுமன்றத்தில் முர்மு உரையாற்ற உள்ளார். இதேபோன்று, இந்திய வம்சாவளியினருடனும் அவர் உரையாட உள்ளார்.

இந்நிலையில், முர்முவுக்கு பிஜி நாட்டின் உயரிய, கம்பானியன் ஆப் தி ஆர்டர் என்ற விருது இன்று அளிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பிஜி நாடுகளுக்கு இடையேயான வலிமையான உறவுகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த கவுரவம் வழங்கப்பட்டு உள்ளது.

இதன்படி, முர்முவுக்கு பிஜி நாட்டின் அதிபர் ரது வில்லியம் விருது வழங்கி கவுரவித்து உள்ளார். விருது பெற்று கொண்ட பின்னர் நன்றி தெரிவித்து ஜனாதிபதி முர்மு பேசும்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை புகழ்ந்து பேசினார்.

ஒரு வலுவான, உறுதி வாய்ந்த மற்றும் வளம் நிறைந்த நாடாக கட்டமைப்பதற்கான பணியில் பிஜியுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருக்கிறது என்று முர்மு பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் பிஜி நாடுகளுக்கு இடையேயான பகிரப்பட்ட மதிப்புகளையும் அவர் சுட்டி காட்டி பேசினார். இரு நாடுகளின் துடிப்பு வாய்ந்த ஜனநாயக விசயங்கள், பல்வேறு சமூகங்கள், மனித சமத்துவத்தில் நம்பிக்கை மற்றும் தனிநபர் உரிமைகள் மற்றும் கண்ணியத்தில் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுவது ஆகியவற்றையும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.

அந்நாட்டில் இன்று தங்கியிருக்கும் அவர், இந்த பயணத்திற்கு பின்னர் நியூசிலாந்து மற்றும் திமோர்-லெஸ்தேவுக்கு செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை முதல் 9-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் சின்டி கிரோவின் அழைப்பின்பேரில் நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளும் முர்மு, கிரோ மற்றும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோருடன் இருதரப்பு கூட்டங்களை நடத்துகிறார்.

1 More update

Next Story