

மாஸ்கோ,
ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான மர்ம விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உளவுத்துறை அதிகாரி மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றியது தொடர்பாக இங்கிலாந்து அதிரடி நடவடிக்கையாக ரஷியாவின் 23 தூதர்களை உளவாளிகள் என கூறி வெளியேற்றியது. ரஷியாவும் பதில் நடவடிக்கையாக இங்கிலாந்து தூதர்களை வெளியேற்றியது.
இவ்விவகாரத்தில் இங்கிலாந்துக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் மற்றும் அமெரிக்கா ரஷியாவிற்கு எதிராக நடவடிக்கையை தொடங்கியது. ரஷிய தூதர்களை வெளியேற்றியது.
இந்நிலையில் உளவாளிகளுக்கு விஷம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்களுக்கு ரஷியா சம்மன் விடுத்து உள்ளது. ரஷிய தூதர்கள் வெளியேற்றப்பட்டதற்கு எடுக்கப்பட்ட பதிலடி நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக ஐரோப்பிய யூனியன் தூதர்களுக்கு ரஷிய வெளியுறவுத்துறை சம்மன் விடுத்தது என செய்தி வெளியாகி உள்ளது. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லாத்வியா, போலந்து, செக் குடியரசு மற்றும் ஐரோப்பிய யூனியனில் இடம்பெறாத நாடுகளுக்கும் சம்மன் விடுக்கப்பட்டது.