

மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு தீவிரமாக களமிறங்கி உள்ளது. ஹங்கேரி, ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகள் இந்த பணிகளுக்கு உதவி வரும் நிலையில், மாணவர்களை மீட்கும் பணியில் ரஷியாவின் உதவியையும் இந்திய அரசு நாடியுள்ளது.
இது தொடர்பாக நேற்று முன்தினம் ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இந்தியர்களை மீட்கும் பணிகளுக்கு உதவ ரஷியாவும் முன்வந்துள்ளது.
இது குறித்து ரஷிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மைய தலைவரான கர்னல் ஜெனரல் மிகெயில் மிசின்ட்சேவ் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினரை மீட்பதற்காக மொத்தம் 130 பஸ்கள் ரஷியாவின் பெல்கோராட் பிராந்தியத்தில் தயாராக இருக்கின்றன. இந்த பஸ்களில் மீட்டு வரும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினருக்காக பெல்கோராட் பிராந்தியத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அங்கு அவர்களுக்கு சூடான உணவு, மருந்து கையிருப்புடன் கூடிய நடமாடும் கிளினிக் வசதிகள் வழங்கப்படும். பின்னர் அவர்கள் பெல்கோராட் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அவர்களின் தாய்நாடுகளுக்கு ரஷியாவின் ராணுவ விமானங்கள் உள்ளிட்ட விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவர்.
இவ்வாறு மிகெயில் மிசின்ட்சேவ் கூறியுள்ளார்.