

நியூயார்க்,
இந்த மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாகும். அந்தவகையில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செரினா வில்லியம்ஸ் ஒரு பாடலை பாடி அதன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் மேலாடை இன்றி தனது மார்பகத்தை கையால் மறைத்தவாறு உள்ளார். அவர் ஐ டச் மைசெல்ஃப் என்ற பாடலை பாடியுள்ளார்.
செரினா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டு கூறியதாவது:
பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதை ஆம்ப்லெட் தனது பாடலில் எழுதியுள்ளார். இதுபோல் அவ்வப்போது சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்.
மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்துள்ளேன். வந்த பின் அவதிப்படுவதை விட வரும்முன் காப்பதே நல்லது என்பது அனைவரும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.
இந்த வீடியோ மார்பக புற்றுநோயால் உயிரிழந்த திவா மற்றும் கிரிஸ்சி ஆம்ப்லெட் ஆகியோருக்கு மரியாதை செய்வதற்காக வெளியிடப்பட்டது என்று செரினா கூறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
இந்த பாடல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிஸ்ஸி ஆம்ப்லெட்டால் எழுதப்பட்டது. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மார்பக புற்றுநேயால் உயிரிழந்தார். இவரது நினைவாக இந்த பாடலை செரினா பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.