பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்

பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் ஷாபாஸ் ஷெரீப் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். ஊழல் தடுப்பு போலீசாரும், ஆளுங்கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷாபாஸ் ஷெரீப் (வயது 67), ஊழல் வழக்கில், இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் (தேசிய பொறுப்புடைமை முகமை) காவலில் உள்ளார்.

ஷாபாஸ் ஷெரீப் கைது குறித்து, நாடாளுமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என சபாநாயகர் கைசரை அவரது இல்லத்தில் சந்தித்து எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

அதன்பேரில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக ஷாபாஸ் ஷெரீப், லாகூரில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இஸ்லாமாபாத் அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் நாடாளுமன்ற பாதுகாப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார். பேச்சின் தொடக்கத்தில் அவர் தனக்காக குரல் கொடுத்த எதிர்க்கட்சி தலைவர்களுக்கு குறிப்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் ஆவேசமாக பேசியபோது கூறியதாவது:

எந்தவித குற்றச்சாட்டும் இன்றி எதிர்க்கட்சித் தலைவர் அவசர கதியில் கைது செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தான் வரலாற்றில் இதுவே முதல் முறை. என் மீதான வழக்கு சரியா என்பது குறித்து விவாதிக்க விரும்பவில்லை. நான் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும், லஞ்ச ஒழிப்பு போலீசுக்கும் இடையேயான புனிதமற்ற கூட்டணி குறித்து பேச விரும்புகிறேன்.

தேர்தல் பிரசாரத்தின்போதே, அவர்கள் கை கோர்த்துள்ளனர் என நான் வெளிப்படையாக கூறினேன். இடைத்தேர்தலுக்கு முன்பு என்னை கைது செய்தனர். ஆனால் மனிதன் நினைப்பது ஒன்று. கடவுள் முடிவு எடுப்பது ஒன்று. ஆளுங்கட்சி எவ்வளவோ முயற்சி செய்தும், இடைத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி பல இடங்களை கைப்பற்றி உள்ளது. அதுவும் முன்பு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.

ஊழல் தடுப்பு கோர்ட்டு தீர்ப்பு, நவாஸ் ஷெரீப் மீது ஊழல் நிரூபிக்கப்படவில்லை என்று தெளிவாக காட்டுகிறது. அவர் கைது செய்யப்பட்டார். இப்போது வெளியே திரும்ப வந்துவிட்டார். உடல் நலமில்லாத மனைவியை (இப்போது அவர் இல்லை. அவர் மரணம் அடைந்து விட்டார்.) பிரிந்து வந்து, சரண் அடைந்து தன் மன சாட்சிக்கு ஏற்ப நடந்து கொண்டார். இதற்கெல்லாம் நாம் விடை கண்டாக வேண்டும்.

எனது வழக்கை வாதிட நான் வரவில்லை. இங்கே அழுவதற்காக நான் வரவில்லை. என் வழக்கின் தகுதிநிலை பற்றி பேசவும் நான் வரவில்லை.

முன்பு எனக்கு துருக்கி, சீனாவில் சொத்து உள்ளது என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி குற்றம் சாட்டியது. இப்போது ஊழல் தடுப்பு போலீஸ் அதேபோன்று குற்றம்சாட்டுகிறது. அவர்களது புனிதமற்ற கூட்டணிக்கு இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை.

நான் பல பாவங்கள் செய்திருக்கிறேன். ஆனால் பஞ்சாப் மாகாணத்தை ஆள வந்தபோது, என் ரத்தத்தையும், வியர்வையையும் அந்த மாகாணத்துக்காக சிந்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com