7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை - ஆதாரம் உள்ளது துருக்கி

துருக்கியில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு ஆடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் துருக்கியின் அரசு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை - ஆதாரம் உள்ளது துருக்கி
Published on

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட்டில் பணிபுரிந்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, சவுதி அரசு குறித்து விமர்சனம் செய்து பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், தனது திருமணத்தை முன்னிட்டு சில ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு கடந்த 2ம் தேதி கசோகி சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் மாயமானார். இந்த சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரசிடம் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். கசோகி கொல்லப்பட்டதற்கான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கடந்த வாரம் துருக்கி அரசு தெரிவித்தது. அவர் கொல்லப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வந்த சவுதி அரசு, விசாரணையின் போது தவறுதலாக கசோகி கொல்லப்பட்டு இருக்கலாம் என்று பாம்பியோவிடம், அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி கசோகி, சவுதி தூதரகத்தில் ஒவ்வொரு விரலாக துண்டித்து சித்ரவதை செய்து பின்பு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் அரசு நாளிதழ் யேனி சபாக் செய்தி வெளியிட்டுள்ளது.

சவுதியின் 15 பேர் கொண்ட குழுவினர் கசோகியை கொன்றதாக துருக்கி ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்நிலையில், யேனி சபாக்கில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், எங்களுக்கு கிடைத்துள்ள பல்வேறு ஆடியோ ஆதாரங்களின்படி, கடந்த 2ம் தேதி சவுதியின் தூதரகத்தின் உள்ளே கசோகியின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது துருக்கியின் சவுதி தூதர் முகமது அல் ஒட்டாய்பி, இந்த சித்ரவதையை வெளியில் செய்யுங்கள், நீங்கள் என்னை பிரச்சனையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறீர்கள் என்று கூறுகிறார். அதற்கு நபர் ஒருவர், நீ சவுதிக்கு வந்து உயிருடன் வாழ வேண்டும் என்று கருதினால் வாயை மூடிக் கொண்டு சும்மா இருஎன்று மிரட்டுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com