முன்னாள் அதிபருக்கு சிறை:தென் ஆப்பிரிக்காவில் வன்முறை 10 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா சிறையில் அடைக்கப்பட்டத்தை கண்டித்து நடைபெற்று வரும் கலவரத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படும் அதிபர் அறிவிப்பு
முன்னாள் அதிபருக்கு சிறை:தென் ஆப்பிரிக்காவில் வன்முறை 10 பேர் பலி
Published on

கேப்டவுன்

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத்தில் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எண்ணிலடங்கா அரசு சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒரு வழக்கில் அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிறைத்தண்டனை, கடந்த புதன்கிழமையிலிருந்து தொடங்கியது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் அவரை விடுவிக்க வலியுறுத்தி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் என்ற பெயரில் கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்படுகின்றன.

ஆண், பெண், குழந்தைகள் என வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் கடைகளில் புகுந்து பொருட்களை தூக்கிச் செல்கின்றனர். பல வாகனங்களும் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த வன்முறைகளால் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் அதிகம் பாதிக்கப்பட்ட குவாஜூலூ-நேட்டல் மற்றும் காவ்டெங் மாகாணங்களில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

தென் ஆப்பிரிக்க நகரங்களில் பரவலாக நடக்கும் வன்முறைகளைத் தணிக்கும் பணிகளில் ராணுவம் பயனபடுத்தப்படுமென அதிபர் சிறில் ராமபோசா கூறி உள்ளார்.

இது குறித்து ராமபோசா கூறியதாவது:-

ராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். போலீசாரின் அனைத்து விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டு அவர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

மிரட்டல், திருட்டு மற்றும் கொள்ளை அச்சுறுத்தலுக்கு எதிராக இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். விரைவில் நாட்டில் அமைதியையும் சட்டஒழுங்கையும் மீட்டெடுப்போம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com