நெருக்கமானவர்களை காப்பாற்றுகிறார்: பொதுமன்னிப்பு உத்தரவுகளை வாரி வழங்கும் டிரம்ப்

தனக்கு நெருக்கமானவர்களை காப்பாற்று விதமாக, பொதுமன்னிப்பு உத்தரவுகளை டிரம்ப் வாரி வழங்கி வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய ஜனாதிபதி டிரம்ப், அடுத்த மாதம் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுகிறார். அதற்கு முன்பாக பல்வேறு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ள தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் பொது மன்னிப்பு உத்தரவுகளை வாரி வழங்கி வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது தனது உறவுக்காரர் சார்லஸ் குஷ்னர், தேர்தல் பிரசார மேலாளர் பால் மனாபோர்ட், முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் ஆகியோருக்கு டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இவங்கா டிரம்பின் கணவர் ஜெரட் குஷ்னரின் தந்தையும் வெள்ளை மாளிகை ஆலோசகருமான சார்லஸ் குஷ்னர் வரி ஏய்ப்பு, பிரசார நிதியில் கையாடல் மற்றும் சாட்சிகளை கலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் ஆவார்.

அதேபோல் 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் பால் மனாபோர்ட்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மே மாதம் சிறையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்த பால் மனாபோர்ட், டிரம்பின் பொது மன்னிப்பால் வீட்டுச்சிறையிலிருந்தும் விடுதலை பெற்றுள்ளார்.

இதே ரஷியா தலையீடு விவகாரத்தில் சிறை தண்டனை பெற்றவர் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன். ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே இவரது தண்டனையை குறைத்து உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது பொது மன்னிப்பு மூலம் விடுதலை வழங்கியுள்ளார்.

இவர்களையும் சேர்த்து சமீபத்தில் மட்டும் டிரம்ப் 29 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com