

லண்டன்,
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 7.86 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 17.3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தசூழலில் இங்கிலாந்தில் தகவமைத்துக்கொண்ட புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று அங்கு அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 6-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 39,237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 21,49,551 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் அதிக அளவாக மேலும் 744 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆயிரத்து 051 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக இங்கிலாந்தில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் தென்னாப்பிரிக்கா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளனர். இதனால் பதற்றத்திலுள்ள மற்ற உலகநாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. இந்தியாவிலும் வரும் 31 ஆம் தேதி வரை இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.