உக்ரைன்: புச்சா படுகொலைகளுக்கு ஐ.நா.வில் இந்தியா கடும் கண்டனம் - விசாரணைக்கும் ஆதரவு..!!

உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு ஐ.நாவில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

ஜெனிவா,

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 41-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றவில்லை.

குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ரஷிய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை நடத்தியது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே, உக்ரைனின் புச்சா நகரில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் 300 பேர் புதைக்கப்பட்டதாகவும், அந்த நகரம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் அந்நகர மேயர் தகவல் தெரிவித்திருந்தார். அங்கு தெருக்களில் வைத்துள்ள குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 பேரின் உடல்கள் போடப்பட்டிருப்பது படங்களுடன் வெளியானது.

இது நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. அவர்கள் மோசமான நிலையில் கொல்லப்பட்டு கிடந்ததாகவும், சிலரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருந்ததாகவும் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருப்பதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு ஐ.நாவில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக ஜ.நா.வில் பேசிய இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைனில் நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதையும் காட்டவில்லை ... புச்சாவில் பொதுமக்கள் படுகொலைகள் பற்றிய சமீபத்திய அறிக்கைகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இந்த கொலைகளை நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம் மற்றும் சுதந்திரமான விசாரணைக்கான அழைப்பை ஆதரிக்கிறோம்.

உக்ரைனில் உள்ள மோசமான மனிதாபிமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய நிவாரண பொருட்கள் உட்பட மனிதாபிமான பொருட்களை அனுப்பி வருகிறது. வரும் நாட்களில் உக்ரைனுக்கு இன்னும் அதிகமான மருத்துவப் பொருட்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்தியா தொடர்ந்து மோசமடைந்து வரும் சூழ்நிலையில் ஆழ்ந்த கவலையில் உள்ளது. வன்முறையை உடனடியாக நிறுத்தவும், விரோதப் போக்கை நிறுத்தவும் தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறது. இராஜதந்திரம் மற்றும் உரையாடலின் பாதையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை மோதலின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com