

பருவநிலை உச்சி மாநாடு
உலக அளவில் 2 நாட்கள் நடைபெறும் பருவநிலை உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.அமீரகத்தின் சார்பில் இந்த உச்சி மாநாட்டில் துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் பங்கேற்றார். இதில் பருவநிலை மாறுபாடு காரணமாக சந்தித்து வரும் சவால்கள் குறித்து அனைவரும் பேசினர்.
அமீரகத்தின் பங்கு
இந்த மாநாட்டின் கருப்பொருள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பருவநிலை மாற்றம் குறித்த சவால்களை 2030-ம் ஆண்டுக்குள் ஒன்றிணைந்து எதிர்கொள்வதன் நோக்கம் குறித்து அவர் விளக்கமளித்து பேசினார்.முன்னாதாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீத கார்பன் உமிழ்தலை குறைப்பதே அமெரிக்காவின் இலக்கு என குறிப்பிட்டார்.
இந்த உச்சி மாநாட்டில் அமீரகம் பங்கேற்றதை அடுத்து, காலநிலை நடவடிக்கைகளில் அமீரகத்தின் பங்கு மற்றும் முயற்சிகளை உறுதிப்படுத்துவதாக உள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.