

ஏடன்,
ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஏமன் அரசுக்கு ஆதரவாக, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
ஏமன் நாட்டின் தெற்கே லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில், போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அந்த பகுதியில் திடீரென கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர். கூடாரங்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தைகள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தெரியாமல் மிதித்ததால் வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
2018-ம் ஆண்டு முதல் சவுதி அரேபியா தலைமையில் மசாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல்வேறு மாகாணங்களில் வைத்த 4.31 லட்சம் கண்ணிவெடிகள் இதுவரை அகற்றப்பட்டு உள்ளன.
கடந்த 3 முதல் 9 வரையிலான தேதிகளில் 784 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு உள்ளன. கண்ணிவெடிகளால் மக்களில் பலர் உயிரிழந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர். பொதுமக்களுக்கான நல உதவிகள் சென்று சேர்வதும் தடுக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, அவற்றை நீக்கும் பணிகள் பரவலாக நடந்து வருகின்றன.