7.5 சதவீத ஒதுக்கீடுக்கு இன்று பதில் கிடைக்குமா?

இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதிய அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களின் கண்கள் எல்லாம், இன்று மதுரை ஐகோர்ட்டில் என்ன நடக்கப்போகிறது? என்பதையே பார்த்து கொண்டிருக்கிறது.
7.5 சதவீத ஒதுக்கீடுக்கு இன்று பதில் கிடைக்குமா?
Published on

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களின் கண்கள் எல்லாம், இன்று மதுரை ஐகோர்ட்டில் என்ன நடக்கப்போகிறது? என்பதையே பார்த்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக சட்டசபையில் செப்டம்பர் 15-ந்தேதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக 18-ந்தேதி அனுப்பப்பட்டது. ஆனால், இன்னும் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் கொடுக்கும்படி, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5-ந்தேதி கவர்னரை சந்தித்த நேரத்தில்கூட கேட்டுக்கொண்டார். அவரிடம் கவர்னர் சட்ட நிபுணர்களின் கருத்துக்காகவும், ஆலோசனைக்காகவும் அனுப்பியிருப்பதாக கூறினார் என்று தெரிகிறது.

இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2017-2018-ம் கல்வியாண்டில் இருந்து பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நீட் தேர்வு நடந்து வருகிறது. நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல, தமிழ்நாட்டு மாணவர்களை, குறிப்பாக ஏழை-எளிய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்று விளக்கி சுப்ரீம் கோர்ட்டில் அரசு சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டு, மூத்த வக்கீல்களை கொண்டு வாதாடப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகள் என்பதால், தமிழக கல்வித்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களால் அதில் பெருமளவில் வெற்றிபெற முடியவில்லை.

குறிப்பாக, அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வி என்பது எட்டாக்கனி என்ற அளவில் இருந்தது. அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்கள் பிளஸ்-2-வுக்கு பிறகு என்ன படிக்கவேண்டும் என்பதை மருத்துவ கல்லூரியை கழித்து பார்த்தே முடிவு செய்ய வேண்டியநிலை வந்துவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளில் அரசு பள்ளிக்கூடங்களில் படித்த 3, 5, 6 என்ற எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர முடிந்தநிலை ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக கடந்த 21-3-2020-ல் சட்டசபையில் அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர்-பழங்குடியினர் பள்ளிகள், கள்ளர்-சீர்மரபினர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் என 1 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிரத்தியேகமாக ஒரு உள்ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சிறப்பு சட்டம் ஒன்றை அரசு பரிசீலிக்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதுபற்றி ஆராய ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.கலையரசன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவும் தன் பரிந்துரையை அளித்தது. அந்த பரிந்துரையை அரசு தீவிரமாக பரிசீலித்து, அரசு பள்ளிக்கூடங்களில் படித்த இந்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாப்படி, 4 ஆண்டு அரசு பள்ளிக்கூடங்களில் படித்து பிளஸ்-2 தேர்வு எழுதியிருக்க வேண்டும். ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில், இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் விசாரித்து, இந்த மசோதாவின் நிலை என்னவென்று இன்று நீதிமன்றத்தில் கவர்னரின் செயலாளரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். எனவே, இன்று மதுரை ஐகோர்ட்டில் கவர்னரின் செயலாளர் அளிக்கும் விளக்கம் என்னவென்பது தெரிந்த பிறகுதான், இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு இருக்குமா?, அல்லது அந்த உள்ஒதுக்கீடு இல்லாமல்தான் நடக்குமா? என்பதற்கு ஒரு பதில் கிடைத்துவிடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com