புதுவை - சென்னைக்கு மின்சார பஸ்

புதுவையிலிருந்து சென்னைக்கு புதிய மின்சார பஸ் சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.
புதுவை - சென்னைக்கு மின்சார பஸ்
Published on

புதுச்சேரி

சுற்றுச்சூழல் மாசுவை குறைக்க பேட்டரி வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது. இந்தநிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பஸ் சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.

புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் இருந்து தினமும் காலை 7, மாலை 4, இரவு 11.30, அதிகாலை 2 மணி என சென்னைக்கு இந்த பஸ் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் சென்னை மதுரவாயல், கோயம்பேடு வழியாக காலை 6, காலை 7, பிற்பகல் 2, மாலை 4, இரவு 7, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி வருகிறது. ஒரு நபருக்கு கட்டணம் ரூ.380 ஆகும். 3 மணி நேரத்திற்குள் நிர்ணயித்த இடத்தை சென்றடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 300 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும்.

இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பி.எஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது. மேலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரைவர் மற்றும் பயணிகள் தலைமை இடத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, பெங்களூருவுக்கும் மின்சார பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

வழக்கமான பஸ்களை விட இ்ந்த பஸ்சில் கட்டணம் அதிகம் என்பதால் பயணிகளிடையே இன்னும் இந்த மின்சார பஸ்சுக்கு போதிய வரவேற்பு இல்லை என பயணி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com