ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்... பாக். அணிக்கு எதிரான போட்டியில் ஹாரி புரூக் மிரட்டல்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்திலும் பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார்.
ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள்... பாக். அணிக்கு எதிரான போட்டியில் ஹாரி புரூக் மிரட்டல்
Published on

ராவல்பிண்டி,

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. தொடக்க வீரர்களான ஜாக் கிராலி, பென் டக்கட் இருவரும் சதமடித்து அசத்தினர். அடுத்து வந்த ஒல்லி போப்பும் சதமடித்து அசத்தினார்.

அணியின் சிறந்த தொடக்கத்தை மேலும் முன்னெடுத்துச்செல்லும் முனைபில் விளையாடிய ஹாரி புரூக், தொடக்கம் முதலே விறுவிறுவென ரன் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது ஆட்டத்தின் 68வது ஓவரை சுழற்பந்துவீச்சாளர் ஷகீல் வீச வந்தார். அந்த ஓவரில் ருத்ரதாண்டவமாடிய புரூக், ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆறு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டியதன் மூலம் அந்த ஓவரில் மட்டும் 24 ரன்களை திரட்டினார்.

இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்திலும் பவுண்டரிகள் அடித்த ஐந்தாவது வீரர் என்ற பெருமையை புரூக் பெற்றுள்ளார். சந்தீப் பாட்டீல், கிறிஸ் கெய்ல், ராம்நரேஷ் சர்வான் ஆகியோருடன் புரூக்ஸ் இணைந்தார். மேலும், டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது சதத்தை பதிவுசெய்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் சிக்ஸ் 4 அடித்த பேட்டர்களின் பட்டியல் -

1982 இல் சந்தீப் பாட்டீல் - பாப் வில்லிஸ் பந்துவீச்சு

2004 இல் கிறிஸ் கெய்ல் -மேத்யூ ஹோகார்ட் பந்துவீச்சு

2006 இல் ராம்நரேஷ் சர்வான் -முனாஃப் படேல் பந்துவீச்சு

2007 சனத் ஜெயசூர்யா -ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு

2022 இல் ஹாரி புரூக் -சவுத் ஷகீல் பந்துவீச்சு

ஆட்டத்தின் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணியின் 4 பேட்ஸ்மேன்கள் சதமடித்து அசத்தினர். இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 75 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com