ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 305 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 305 ரன்கள் குவிப்பு
Published on

பெர்த்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. பிரிஸ்பேன், அடிலெய்டு ஆகிய இடங்களில் நடந்த முதல் இரு டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கியது.

டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக அலஸ்டயர் குக், ஸ்டோன்மான் ஆகியோர் களம் இறங்கினார்கள். தனது 150-வது டெஸ்டில் பங்கேற்ற முன்னாள் கேப்டன் குக் (7 ரன்) 5-வது ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து களம் கண்ட ஜேம்ஸ் வின்ஸ் (25 ரன்), ஹேசில்வுட் பந்து வீச்சிலும், கேப்டன் ஜோரூட் (20 ரன்) கம்மின்ஸ் பந்து வீச்சிலும் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்கள். இதைத்தொடர்ந்து டேவிட் மலான், ஸ்டோன்மானுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 131 ரன்னாக உயர்ந்த போது சிறப்பாக ஆடிய ஸ்டோன்மான் (56 ரன்கள், 110 பந்துகளில் 10 பவுண்டரியுடன்) மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஸ்டோன்மானுக்கு முதலில் ஆடுகள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் டி.ஆர்.எஸ். முறையில் அப்பீல் செய்தனர். அதில் ஆஸ்திரேலிய அணியின் அப்பீலுக்கு வெற்றி கிடைத்தது.

இதனையடுத்து 7-வது வீரராக களம் இறங்கக்கூடிய பேர்ஸ்டோ 6-வது வரிசையில் களம் கண்டார். டேவிட் மலான்-பேர்ஸ்டோ இணை அருமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அபாரமாக ஆடிய டேவிட் மலான் 159 பந்துகளில் சதத்தை எட்டினார். 8-வது டெஸ்டில் ஆடும் டேவிட் மலான் அடித்த முதல் சதம் இதுவாகும். முன்னதாக டேவிட் மலான் 92 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற பான்கிராப்ட் தவற விட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மலான்-பேர்ஸ்டோ ஜோடி இதுவரை 174 ரன்கள் திரட்டி உள்ளது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 300 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல்முறையாகும். டேவிட் மலான் 174 பந்துகளில் 15 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 110 ரன்னும், பேர்ஸ்டோ 149 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 75 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com