முதல் ஒருநாள் போட்டி: வார்னர், ஸ்மித் அதிரடி- இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
Image Tweeted By ICC
Image Tweeted By ICC
Published on

அடிலெய்டு,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி அடிலெய்டு ஓவலில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 6 ரன்களிலும் பில் சால்ட் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு பக்கம் சீரான இடைவெளியில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார். அவர் 134 ரன்னில் (128 பந்துகள்) ஜாம்பா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடந்து ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ், ஜாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதை தொடர்ந்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர்- டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் 69 ரன்களில் (57 பந்துகள்) ஜார்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வார்னர்- ஸ்டீவ் ஸ்மித் ஜோடி 50+ ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தனர். இதில் வார்னர் 86 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த லபுசேன், கேரி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் சிறப்பாக விளையாடிய ஸ்மித் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 291 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஸ்மித் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் (78 பந்துகள்) குவித்தார். இதன் மூலம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com