

புதுடெல்லி,
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு அர்ஜூனா விருதுக்காக இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தணா ஆகியோர்களின் பெயரை இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்துள்ளது.
32 வயதான ஷிகர் தவான், தற்போது ஐபிஎல் 20 ஓவர் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிகளிலும் துவக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் விளையாடி வருகிறார். அதேபோல், ஸ்மிரிதி மந்தணாவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் உலக கோப்பை தொடரில், இந்திய அணி இறுதிப்போட்டி வரை செல்வதற்கு மந்தணாவின் பங்களிப்பு அதிக அளவில் இருந்தது. இந்த சூழலில், மந்தணா மற்றும் ஷிகர்தவானின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புஜாரா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது
அர்ஜூனா விருது:-
அர்ஜுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு வில்விளையாட்டில் சிறந்த வீரராக கருதப்படும் அர்ஜுனனின் வெங்கலச்சிலையோடு, ரூ. 5,00,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது. 2001ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுகள், உலக கோப்பை, உலக சாதனையாளர் துறைகள், கிரிக்கெட், இந்திய பரம்பரை விளையாட்டுகள், உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள் போன்ற பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன.