‘மனதை புண்படுத்தும் வகையில் விமர்சிக்காதீர்’ - பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் வேண்டுகோள்

மனதை புண்படுத்தும் வகையில் விமர்சிக்காதீர்கள் என பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘மனதை புண்படுத்தும் வகையில் விமர்சிக்காதீர்’ - பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் வேண்டுகோள்
Published on

பர்மிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டதை தொடர்ந்து அந்த நாட்டு ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் அணியினரை சகட்டுமேனிக்கு வசைபாடினார்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள வணிக வளாகத்துக்கு தனது மகனுடன் சென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வழிமறித்து உங்களை பார்க்க கொளுத்த பன்றி போல் தெரிகிறதே ஏன்? என்று கேள்வி கேட்டு அதனை செல்போனில் பதிவு செய்தார். அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து நடந்த சம்பவத்துக்காக அந்த ரசிகர் வருத்தம் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்த ஒரு பேட்டியில் அந்த ரசிகர் கூறியது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. மக்கள் எங்களை பற்றி சொல்லும் கருத்துகளை கட்டுப்படுத்தும் சக்தி எங்கள் கையில் கிடையாது. போட்டியில் வெற்றி, தோல்வி ஒரு அங்கமாகும். நாங்கள் தான் தோல்வியை சந்தித்த முதல் அணி இல்லை. முந்தைய பாகிஸ்தான் அணிகளும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. முந்தைய அணிகளும் இதுபோல் விமர்சனங்களை சந்தித்து இருக்கின்றன. இது போன்ற விமர்சனங்கள் மனதை எந்த அளவுக்கு காயப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது சமூக வலைதளங்களில் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ? அதனை எழுதுகிறார்கள். இந்த சம்பவங்கள் வீரர்களின் மனநிலையை பாதிக்கிறது. எங்களது ஆட்டம் குறித்து விமர்சியுங்கள் தவறில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் மனதை புண்படுத்தும் வகையில் திட்டாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com