

மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் பரபரப்பான பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது. 14 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் பெங்களூரு அணி 5-வது இடத்தில் உள்ளது. மீதம் இருக்கும் ஒரு போட்டியில் வலுவான குஜராத் அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற வேண்டியது பெங்களூரு அணிக்கு முக்கியமானதாகும்.
இதுவரை 14 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்றாலும் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, மற்றும் அணியின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் ஜாம்பவான்கள் கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ்.
கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் இருவரும் தற்போது பெங்களூரு அணியில் இல்லை என்றாலும் பல ஆன்டுகளாக அணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அணி நிர்வாகம் தற்போது அவர்களை கவுரவித்துள்ளது.
கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோருக்கு ஹால் ஆஃப் பேம் என்ற கவுரத்தை பெங்களுரு அணி வழங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஹால் ஆஃப் பேம் என்ற கவுரவத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அறிமுகப்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக அந்த அணி வெளியிட்டுள்ள வீடியோவில், கிறிஸ் கெயில் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் ஆர்சிபி அணியின் ஹால் ஆஃப் பேம்-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வீடியோ கால் மூலம் அவர்களுடன் உரையாடிய பெங்களூரு வீரர்கள் மற்றும் கெயில் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோருடன் இருக்கும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பேசிய கோலி, " கிறிஸ் கெயிலுடன் 7 ஆண்டுகளும், டிவில்லியர்ஸூடன் 11 ஆண்டுகள் பயணித்துள்ளேன். இருவருடனும் மறக்க முடியாத பல நினைவுகள் உள்ளது.
2016 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிரான டிவில்லியர்ஸ்-யின் ஆட்டத்தை மறக்க முடியாது . அதே நேரத்தில் கெயில் அடித்த 175 ரன்கள் இன்னிங்ஸை யாரால் மறக்க முடியும்? " என கோலி உருக்கமாக பேசினார்.
இதனை கேட்ட கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் கோலி மற்றும் அணி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.