கடினமான காலங்களில் எனக்கு ஆதரவாக இருந்தவர் ஜூலன் கோஸ்வாமி தான் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

கடந்த 1999-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி முதல்முறையாக ஒருநாள்தொடரை இந்தியா வென்றுள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

முன்னதாக கோஸ்வாமியை கவுரவிக்கும் வகையில் 'டாஸ்' போடும் நிகழ்ச்சிக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தன்னுடன் அவரை அழைத்து சென்றார். அவர் பேட்டிங் செய்ய வருகையில் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் வரிசையாக நின்று கைதட்டி வரவேற்றனர்.

இதேபோல் பீல்டிங் செய்ய களம் இறங்குகையில் கோஸ்வாமிக்கு இந்திய அணி வீராங்கனைகள் மைதானத்தில் வரிசையாக நின்று கைதட்டி உற்சாகப்படுத்தி கவுரவம் அளித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அந்த அணி வீராங்கனைகள் கையெழுத்திட்ட சீருடை (பனியன்) நினைவுப்பரிசாக அளிக்கப்பட்டது. அத்துடன் இந்திய அணி தரப்பிலும் அவருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து பேட்டியளித்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், "நான் அறிமுகமான போது, ஜூலன் கோஸ்வாமி அணியின் கேப்டனாக இருந்தார், நான் சிறப்பாக விளையாடும் போது , பலர் என்னை ஆதரித்தனர், ஆனால் எனது கடினமான காலங்களில் அவர்தான்(கோஸ்வாமி) எனக்கு ஆதரவாக இருந்தார். நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், அவர் எப்போதும் எங்களுடன் இருக்கிறார் என்பதை சொல்ல விரும்புகிறேன். அவர் எப்போதும் எனக்கு வழிகாட்டியாக இருந்தார்.

மேலும் போட்டியை பற்றி அவர் கூறுகையில், நாங்கள் 4 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்களை எடுத்திருந்தோம். விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வேகபந்து தாக்குதல் மற்றும் சுழற்பந்து வீச்சு எங்களிடம் இருப்பது தெரியும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com