

சார்ஜா,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சை துவம்சம் செய்து 7-வது வெற்றியை ருசித்ததுடன், புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறியது.
இதில் மும்பை நிர்ணயித்த 150 ரன் இலக்கை ஐதராபாத் அணி 17.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து அசத்தியது. 4 ஓவர்கள் பந்து வீசி 19 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய ஐதராபாத் சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2016-ம் ஆண்டு சாம்பியனான ஐதராபாத் அணி தொடர்ந்து 5-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது.
வெற்றிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், பஞ்சாப் அணிக்கு எதிராக சந்தித்த மோசமான தோல்விக்கு பிறகான இந்த மிகப்பெரிய வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மும்பை அணியில் ஒன்றிரண்டு முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்து இருந்தனர். இருப்பினும் சார்ஜா மைதானத்தில் அவர்களை 150 ரன்களுக்குள் நாங்கள் கட்டுப்படுத்தியது சிறப்பான விஷயமாகும். நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ள அணிக்கு எதிராக ஷபாஸ் நதீம் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தது தனித்துவமான செயல்பாடாகும். எங்கள் அணியில் போராட்ட குணத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் உள்ளனர். 2016-ம் ஆண்டில் கடைசி கட்டத்தில் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் தான் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலையில் இருந்து நாங்கள் சாதித்து காட்டினோம். அதே போன்ற நிலைமையில் தான் இப்போதும் இருக்கிறோம்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (வெளியேற்றுதல் சுற்றில் சந்திக்கும் அணி) மிகவும் சிறப்பான அணியாகும். அந்த அணியில் நிறைய அபாயகரமான வீரர்கள் உள்ளனர். 2016-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி இருக்கிறோம். இது இன்னொரு வாழ்வா, சாவா? போட்டியாகும். வெற்றியின் உத்வேகத்தை அடுத்த ஆட்டத்துக்கும் எடுத்து செல்ல முடியும் என்று நம்புகிறோம் என்றார்.