ரஞ்சி கோப்பையை முதல்முறையாக கைப்பற்றுகிறது, மத்தியபிரதேச அணி

மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மத்தியபிரதேச அணி 536 ரன்கள் குவித்துள்ளது.
ரஞ்சி கோப்பையை முதல்முறையாக கைப்பற்றுகிறது, மத்தியபிரதேச அணி
Published on

பெங்களூரு,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை-மத்தியபிரதேச அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மத்தியபிரதேச அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 368 ரன்கள் எடுத்து இருந்தது. ரஜத் படிதார் 67 ரன்னுடனும், கேப்டன் ஆதித்யா ஸ்ரீவத்சவா 11 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய ஆதித்யா ஸ்ரீவத்சவா 25 ரன்னிலும், அடுத்து வந்த ரகுவன்ஷி 9 ரன்னிலும், பார்த் சஹானி 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து சரன்ஷ் ஜெயின், ரஜத் படிதாருடன் இணைந்தார். அபாரமாக ஆடிய ரஜத் படிதார் 163 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் விளாசிய 8-வது முதல்தர போட்டி சதம் இதுவாகும். படிதார் 122 ரன்னில் (219 பந்து, 20 பவுண்டரி) துஷர் தேஷ்பாண்டே பந்து வீச்சில் போல்டு ஆனார். கடைசி விக்கெட்டாக சரன்ஷ் ஜெயின் 57 ரன்னில் வீழ்ந்தார்.

முடிவில் மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 177.2 ஓவர்களில் 536 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி 162 ரன்கள் முன்னிலை பெற்றது. மும்பை தரப்பில் ஷம்ஸ் முலானி 5 விக்கெட்டும், துஷர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மொகித் அவாஸ்தி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் தாமோர் 25 ரன்னிலும், கேப்டன் பிரித்வி ஷா 44 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அர்மான் ஜாபர் 30 ரன்களுடனும், சுவேத் பார்கர் 9 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு இருப்பதால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மத்தியபிரதேச அணி ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வெல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com