முனைப்பு காட்டும் முரளி விஜய்!

சிறிது கால இடைவெளிக்குப் பின் இந்திய அணிக்குத் திரும்பிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி யிருக்கிறார், தமிழக பேட்ஸ்மேன் முரளி விஜய்.
முனைப்பு காட்டும் முரளி விஜய்!
Published on

டெஸ்ட் அரங்கில் ஒரு நம்பகமான தொடக்க வீரராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருக்கும் முரளி விஜயின் பேட்டி...

ரஞ்சிக் கோப்பை போட்டியில் ஒடிசாவுக்கு எதிரான ஆட்டத்தில் 140 ரன்கள் விளாசியது, இலங்கை எதிரான டெஸ்ட் தொடரில் உங்களுக்கு எந்த வகையில் உதவியது?

சரியான நேரத்தில் வந்த நல்ல சதமாக அது அமைந்தது. அப்படி ஒரு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தத்தான் நான் முயன்று கொண்டிருந்தேன். இலங்கை தொடருக்கு முன்னால் ஒரு போட்டியில் விளையாடிப் பயிற்சி பெற நான் ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அது அப்படியே அமைந்தது.

நீங்கள் கடைசியாக டெஸ்ட் விளையாடியது மார்ச் மாதத்தில். ஜூலை-ஆகஸ்டு இலங்கைப் பயணத்திலும் நீங்கள் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் நீங்கள் தற்போதைய தொடருக்கு எவ்வாறு தயாராகியிருந்தீர்கள்?

குறிப்பிட்ட காலகட்டத்தை, காயம் அடைந்தவர்கள் எப்படிக் கழிப்பார்களோ அப்படித்தான் நான் கழித்தேன், மீண்டும் கிரிக்கெட் விளையாடும் நாளை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தேன். ஒரு கிரிக்கெட் வீரனாக நான் என்னை மேம்படுத்திக்கொள்ளவும் ஆவலாக இருந்தேன். இந்த விஷயங்கள்தான் எனக்கு உற்சாகமூட்டுகின்றன. இந்திய அணியில் இணையும்போது எப்படி என்னால் சிறப்பாகச் செயல்பட முடியும், அணியின் வெற்றிக்கு எவ்வாறு என்னால் பங்களிக்க முடியும் என்பதே என் எண்ணமாக இருந்தது.

அணியில் இல்லாத காலம் உங்களுக்குக் கற்பித்த பாடம் என்ன?

அந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு நாளையும் கழிப்பதே கடினமாக இருந்தது. நாம் எவ்வளவுதான் வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முயன்றாலும், அணிக்கு எப்போது திரும்புவோம், நம் உடல்தகுதி சரியாக இருக்குமா என்பது போன்ற சஞ்சலங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். நானும் மனிதன்தானே? இந்தக் கடினமான காலகட்டத்தைக் கடக்க எனது குடும்பத்தினரும், நண்பர்களும்தான் உதவினர்.

அப்போது, பல நாட்களுக்கு உங்களால் பேட்டை தொட்டிருக்கவே முடியாது. அது வித்தியாசமாக இருந்ததா?

ஆமாம். இரண்டொரு மாத காலத்துக்கு நான் பேட்டை கையில் தொடவில்லை. அப்போது நான் எனக்கெனவே வாழ்ந்தேன். நிறைய பயணம் செய்தேன், புதிய விஷயங்களைப் பார்த்தேன். ஆனால், நீ உண்மையிலேயே நேசிக்கும் விஷயமான கிரிக்கெட்டுக்கு எப்போது மீண்டும் திரும்பப் போகிறாய்? என்ற கேள்வி, தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

உங்களின் காயத்துக்கும் இலங்கை அணிக்கும் எதுவும் தொடர்பு இருக்கிறதா? நீங்கள் 2015-ல் அங்கே சென்றிருந்தபோது காயம் அடைந்தீர்கள். இந்த ஆண்டு இலங்கை பயணத்துக்கு தேர்வானபோதும் மணிக்கட்டில் காயம் அடைந்தீர்கள்...

நான் கடந்த 2010-ம் ஆண்டு இலங்கை தொடரில் பங்கேற்றேன். அப்போது நான் நல்ல உடல்தகுதியுடன் இருந்தேன், நன்றாகவும் ஆடினேன். காயம் ஏற்படுவது இயற்கையானது. நான் இதையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை.

செட்டேஸ்வர் புஜாராவுக்கும் உங்களுக்கும் களத்திலும், களத்துக்கு வெளியிலும் எப்போது நல்ல உறவு இருந்திருக் கிறது. அவருடன் மறுபடி இணைந்து விளையாடத் தொடங்கியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்திய அணியிலும் சரி, இந்திய ஏ அணி போன்றவற்றிலும் சரி, நேர்மறை எண்ணம் நிரம்பியிருக்கிறது. அதை நாங்கள் விளையாடும் விதத்திலேயே நீங்கள் பார்க்க முடியும். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் கிரிக்கெட் அறிவை பகிர்ந்துகொள்கிறோம், பரஸ்பரம் அடுத்தவர் சாதிப்பதை ரசிக்கிறோம். அது அணியின் வெற்றிக்கு உதவுகிறது. எனக்கும் புஜாராவுக்கும் களத்துக்கு வெளியிலும் நல்ல உறவு இருக்கிறது. அதேபோலத்தான், விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா போன்ற அனைவருடனும். நாங்கள் அனைவரும் ஏறக்குறைய ஒரு வயது சார்ந்தவர்கள் என்பதால், எங்களால் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு சிறந்த பேட்ஸ்மேனான நீங்களே வியக்கும் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்?

இப்போதைக்கு, நமது முதல் 5 வீரர்களின் ஆட்டத்தை நான் மிகவும் ரசிக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவரின் இயல்பும் வித்தியாசமானது, ஆனால் அவர்களின் ஆட்டம் உயர்தரமானது. ஒரு போட்டியை அணுகும்விதத்தில் ஏபி டி வில்லியர்சை எனக்கு மிகவும் பிடிக்கும். இயல்பாகவே, ஹசீம் ஆம்லா, அப்புறம் குயின்டன் டி காக். நான் எப்போதுமே யுவராஜ் சிங்கின் பெரிய விசிறி. அவரது திறமை என்னை திகைப்பில் ஆழ்த்தும். அவர் பந்தை அடிக்கும் விதம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

இந்திய அணியில் தனது பெயரை அழுத்தமாகப் பதிக்க வேண்டும் என்று முனைப்புடன் உழைக்கிறார், முரளி விஜய். அந்த உழைப்புக்குத் தகுந்த பலன் கிட்டும்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com