

கொல்கத்தா,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் (பி.சி.சி.ஐ.) மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி (வயது 48) கடந்த 2ந்தேதி மேற்கு வங்காளத்தில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதன்பின் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாயில் இருந்த 3 அடைப்புகளில் ஒன்று ஏற்கனவே அகற்றப்பட்ட நிலையில் மீதமுள்ள இரு அடைப்புகளை சரி செய்ய ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை கடந்த 2 நாட்களுக்கு முன் அளிக்கப்பட்டு இரண்டு ஸ்டன்ட் பொருத்தப்பட்டது.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு கங்குலியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கங்குலி நலமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கங்குலி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை முடித்து கொண்டு இன்று வீடு திரும்பினார். அவர் நலமுடன் உள்ளார் என அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவர் ராணா தாஸ் குப்தா தெரிவித்து உள்ளார்.