இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா புறப்பட அந்நாட்டு விளையாட்டு மந்திரி திடீர் தடை?

இந்தியா வருகை தர இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு விளையாட்டு மந்திரி தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா புறப்பட அந்நாட்டு விளையாட்டு மந்திரி திடீர் தடை?
Published on

கொழும்பு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டித்தொடர் முடிந்ததும், இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் விளையாடும் இலங்கை அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியில் இடம் பெறாமல் ஒருநாள் போட்டிகளில் மட்டும் இடம் பெற்றுள்ள இலங்கை வீரர்கள் 9 பேர் நேற்று, பின்னிரவு கொழும்பு விமான நிலையத்தில் இருந்து இந்தியா புறப்படுவதாக இருந்தது. இதற்காக கொழும்பு விமான நிலையம் வந்த வீரர்கள் திடீரென திருப்பி அனுப்பப்பட்டனர்.

இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி தயாஸ்ரீ ஜெயசேகரா, அணி தேர்வு குறித்து அதிருப்தி அடைந்ததால், வீரர்களின் இந்தியா வருகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அணி சமீப காலமாக மிக மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நிகழாண்டில் 21 ஒருநாள் போட்டிகளில் தோல்வி கண்டுள்ள இலங்கை அணி, வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், இலங்கை அணி நிர்வாகத்தில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் இடம் பெற்றுள்ள வீரர்களில் இரண்டு பேரை, மாற்ற இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி ஜெயசேகரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் தேசிய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை மாற்றும் அதிகாரம் விளையாட்டுத்துறை மந்திரிக்கு உள்ளது. திசேரா பெரேரா தலைமையில் உபுல் தரங்கா, தனுக்ஷா குனதிலகா, அசலே குனரத்னே, சதுரங்கா டி சில்வா, சச்சித் பதிரானா, துஷ்மனதா சமீரா மற்றும் நுவன் பிரதீப் ஆகிய ஒன்பது வீரர்கள் நேற்று புறப்பட இருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com