பெண்கள் டி20 உலகக் கோப்பை - 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

பாகிஸ்தான் அணிக்கு எதிரான பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்தது.
பெண்கள் டி20 உலகக் கோப்பை - 114 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
Published on

கேப்டவுன்,

10 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று கேப்டவுனில் நடந்த 'பி' பிரிவின் கடைசி லீக்கில் இங்கிலாந்தும், பாகிஸ்தானும் மோதின. பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப் காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக துணை கேப்டன் நிதா தர் அணியை வழிநடத்தினார்.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் சோபியா டங்லி (2 ரன்), அலிஸ் கேப்சி (6 ரன்) ஆகியோர் சீக்கிரம் வெளியேறினாலும் அடுத்து வந்த வீராங்கனைகள் பாகிஸ்தானின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி ஸ்கோரை எகிற வைத்தனர். டேனி வியாட் 59 ரன்களும் (33 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), நாட் சிவெர் 81 ரன்களும் (40 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் எமி ஜோன்ஸ் 47 ரன்களும் (31 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர்.

20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. 20 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு எந்த அணியும் 200 ரன்களை கூட தொட்டதில்லை. 2020-ம் ஆண்டில் தாய்லாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்ததே, பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பையில் முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

பாகிஸ்தான் பரிதாபம்

பாகிஸ்தான் தரப்பில் பாத்திமா சனா 2 விக்கெட்டும், சாடியா இக்பால், நிதா தர், துபா ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதில் சுழற்பந்து வீச்சாளர் நிதா தரின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 126 ஆக (130 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீசின் அனிசா முகமதுவிடம் (125 விக்கெட்) இருந்து தட்டிப்பறித்தார்.

அடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி களம் புகுந்த பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 99 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 114 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இங்கிலாந்து தரப்பில் கேத்ரின் சிவெர் புருன்ட், சார்லி டீன் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அரைசதம் அடித்த நாட் சிவெர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

அரைஇறுதியில் யார்-யார்?

'பி' பிரிவில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து 8 புள்ளிகளுடன் கம்பீரமாக அரைஇறுதியை எட்டியது. அந்த அணி அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்தை சந்திக்கும். இதே பிரிவில் 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 6 புள்ளியுடன் 2-வது இடத்தை பெற்ற இந்திய அணி அரைஇறுதியில் 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை நாளை (வியாழக்கிழமை) எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் நடையை கட்டியது. அந்த அணி 20 ஓவர் உலகக் கோப்பையில் ஒரு முறை கூட லீக் சுற்றை தாண்டியது கிடையாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com