விராட் கோலி யாருக்காகவும் அவரை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியம் கிடையாது - பிசிசிஐ தலைவர்

பாகிஸ்தானுக்கு எதிரான விராட் கோலியின் ஆட்டம் எனக்கு கனவு போல் இருந்தது என பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி கூறியுள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

பெங்களூரு,

டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு சூப்பர் 12 சுற்றில் ஆடி வருகின்றன. இதில் குருப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதன் பின்னர் தனது இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் விராட் கோலியில் சிறப்பான ஆட்டம் குறித்து பிசிசிஐ புதிய தலைவர் ரோஜர் பின்னி புகழ்ந்து பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற போட்டியை காண வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. கோலி அந்த பந்தை சிக்சர் அடித்த விதம் இன்னும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு சாதகமாக சென்று, கடைசி நேரத்தில் இந்தியாவின் பக்கம் வெற்றி வருவதை அடிக்கடி நம்மால் காண முடியாது. விராட் கோலி யாருக்காகவும் அவரை நிரூபித்து காட்ட வேண்டிய அவசியமே கிடையாது.

அவரை போன்ற வீரர்கள் அழுத்தமான சூழல்களில் தான் பலம் பெறுவார்கள். ஏனென்றால் அழுத்தங்களும், கடினமான சூழல்களும் தான் ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்கும். கோலியை இப்படி பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என ரோஜர் பின்னி கூறினார்.

சிறிய அணிகள் வளர்ந்து வருவதை பார்க்க அருமையாக உள்ளது. இந்த உலகக்கோப்பையில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தங்களை நிரூபித்து காட்டி உள்ளனர். இனிமேல் சிறிய அணிகளை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களால் உங்களை எளிதாக வீழ்த்த முடியும். பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெற முடியாது என நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com