பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு
Published on

மும்பை

11-வது பெண்கள் உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 24-ந் தேதி முதல் ஜூலை 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, 2 முறை சாம்பியனான இங்கிலாந்து, 2000-ம் ஆண்டு சாம்பியன் நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒருமுறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி அறிவிப்பு

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணியில் 15 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். தென்ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 4 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீராங்கனைகளில் ஒருவர் தவிர மற்றவர்கள் அப்படியே அணியில் தொடருகின்றனர். தேவிகா வைத்யா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஸ்ரீரிதி மந்தனா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் அணியில் இடம் பெறாத மந்தனா காயம் குணமடைந்து முழு உடல் தகுதி பெற்று இருப்பதால் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

பெண்கள் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, மோனா மேஷ்ரம், பூனம் ராவுத், தீப்தி ஷர்மா, ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே, எக்தா பிஸ்த், சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), மான்சி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட், பூனம் யாதவ், நுஷாத் பர்வீன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீரித் மந்தனா.

இந்திய அணியின் ஆட்டங்கள்

இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் ஜூன் 24-ந் தேதி இங்கிலாந்தையும், ஜூன் 29-ந் தேதி வெஸ்ட்இண்டீசையும், ஜூலை 2-ந் தேதி பாகிஸ்தானையும், ஜூலை 5-ந் தேதி இலங்கையையும், ஜூலை 8-ந் தேதி தென்ஆப்பிரிக்காவையும், ஜூலை 12-ந் தேதி ஆஸ்திரேலியாவையும், ஜூலை 15-ந் தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com