

ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் கடற்கரை அருகே அமைந்துள்ள வி.எம்.எஸ். லெப்பை விளையாட்டு அரங்கத்தில் காயல்பட்டினம் லெவல் 3 விளையாட்டு கழகம் சார்பில் முதலாம் ஆண்டு உமர் நினைவு கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. போட்டியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் லெவல் 3 அணியும், காயல்பட்டினம் ஆல்காம் அணியும் மோதியது. இதில் லெவல் 3 அணி 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஹாங்காங் முன்னாள் தமிழ் சங்க தலைவர் ஜமால் தலைமை தாங்கினார். முகம்மது உமர் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்ற லெவல் 3 அணிக்கு உமர் நினைவு சுழற்கோப்பை, ரூ.15 ஆயிரம், 2-ம் இடம் பிடித்த ஆல்காம் அணிக்கு சுழற்கோப்பை, ரூ.10 ஆயிரத்தை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்டம் முழுவதும் கால்பந்து, கபடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாணவர் அணி மாநில துணை அமைப்பாளர் உமரி சங்கர், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் அமீது, காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.