உலகக் கோப்பை கூடைப்பந்து: முதல்முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி

டெனிஸ் மைக் ஸ்குரோடர் 28 புள்ளிகள் எடுத்து ஜெர்மனியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பாசே,

19-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியை ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. 32 அணிகள் பங்கேற்ற இந்த கூடைப்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் ஜெர்மனியும், செர்பியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இவ்விரு அணிகளில் கிரீடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாசே நகரில் நேற்றிரவு நடந்தது. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த இந்த ஆட்டத்தில் முதல் கால்பகுதியில் செர்பியா 26-23 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டெழுந்த ஜெர்மனி மளமளவென புள்ளிகளை குவித்து முன்னிலை பெற்றதுடன் அதை கடைசி வரை தக்க வைத்துக் கொண்டது. இறுதியில் ஜெர்மனி 83-77 என்ற புள்ளி கணக்கில் செர்பியாவை சாய்த்து உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. 73 ஆண்டுகால உலகக் கோப்பை கூடைப்பந்து வரலாற்றில் ஜெர்மனி உலகக்கோப்பையை கையில் ஏந்துவது இதுவே முதல் முறையாகும்.

அதிகபட்சமாக டெனிஸ் மைக் ஸ்குரோடர் 28 புள்ளிகள் எடுத்து ஜெர்மனியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கனடா 127-118 என்ற புள்ளி கணக்கில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த போட்டியில் டாப்-4 இடங்களை பிடித்த ஜெர்மனி, செர்பியா, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com