

டோக்கியோ
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று பெரும்பாலான போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க படிக்கட்டை நோக்கி பயணித்து மனநிறைவை அளித்தனர்.
பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள மியா பிளிக்பெல்ட்டை (டென்மார்க்) சந்தித்தார்.
41 நிமிடம் நடந்த இந்த மோதலில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான சிந்து 21-15, 21-13 என்ற நேர்செட்டில் பிளிக்பெல்ட்டை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால்பதித்தார். இந்த தொடரில் இதுவரை ஒரு செட்டை இழக்காமல் வீறுநடை போடும் சிந்து கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தற்போது 5-வது இடம் வகிப்பவருமான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) இன்று எதிர்கொண்டார்.
இதில் சிந்து ஜப்பான் வீராங்கனையை 21-13, 22-20 என்ற கணக்கில் வென்றார், இதன் மூலம் அவர் ஒலிம்பிக் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்தார்.