

புதுச்சேரி
புதுவையில் வருகிற 19-ந்தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
புதுவை ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமி நாராயணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
18-ந்தேதி வருகை
திருமலை திருப்பதி தேவஸ்தான கல்யாண உற்சவ திட்டம் மற்றும் ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் இணைந்து புதுவை லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் வருகிற 19-ந்தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடத்துகிறது. புதுவையில் கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு இந்த திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதன்பின் நடைபெறவில்லை.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த உற்சவம் மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளது. இதற்காக லாஸ்பேட்டை மைதானத்தில் ஏற்பாடுகளை செய்து வருகிறோம். புதுச்சேரியில் 5-வது முறையாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
திருக்கல்யாண உற்சவத்துக்காக திருமலையில் இருந்து சாமி 18-ந்தேதி மாலையே புதுவை விவேகானந்தா பள்ளிக்கு வருகிறது. இங்கு தரிசனம் நடைபெறும்.
திருக்கல்யாண உற்சவம்
19-ந்தேதி மாலை 4 மணி அளவில் ஹெலிபேடு மைதானத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கும். இரவு 9 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
புதுச்சேரி மட்டுமல்லாது கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பக்கத்து மாவட்ட மக்களும் இதில் பங்கு பெறுகிறார்கள். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, திருமலை திருப்பதி தேவஸ்தான சேர்மன் சுப்பாரெட்டி, செயல் அலுவலர் ஜவகர்ரெட்டி, கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி, உறுப்பினர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.
இலவச பஸ் வசதி
இதற்காக புதிய பஸ் நிலையத்தில் இருந்து இலவச பஸ் வசதி செய்யப்படுகிறது. மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின்படி நிகழ்ச்சிக்கு வருபவர்கள முககவசம் அணிந்து வரவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார்.
பேட்டியின்போது டிரஸ்ட்டின் துணை தலைவரும் எம்.பி.யுமான செல்வகணபதி, செயலாளர் பாலாஜி, பொருளாளர் நவீன் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.