நடிகை பாவனா வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் பதுங்கலா? கேரள போலீசார் தேடுதல் வேட்டை


நடிகை பாவனா வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் பதுங்கலா? கேரள போலீசார் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 21 Feb 2017 11:00 PM GMT (Updated: 21 Feb 2017 8:05 PM GMT)

நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் பதுங்கி இருக்கலாம் என கருதி, கேரள போலீசார் தமிழ்நாட்டுக்கு வந்து தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

கொச்சி,

நடிகைக்கு பாலியல் தொல்லை

பிரபல நடிகை பாவனா, கடந்த 17–ந் தேதி கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு சொகுசு காரில் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு கும்பலினால் கடத்தப்பட்டு, 2 மணி நேரம் காரிலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.

இந்த விவகாரம், கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை பாவனாவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த கேரள படவுலகமும் அணி திரண்டுள்ளது.

3 பேர் சிறையில் அடைப்பு

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை பாவனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய கேரள மாநில முதல்–மந்திரி பினராயி விஜயன் உறுதி அளித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகை பாவனா பயணம் செய்த காரின் டிரைவர் மார்ட்டின் மற்றும் வடிவேல் சலிம், பிரதீப் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அலுவாவில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டனர்.

முக்கிய தடயங்கள் சிக்கின

நடிகை பாவனாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், அவர் பயணம் செய்த காரில் இருந்து, அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதற்கு ஆதாரமான தடயங்களை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றினர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகிற புல்சார் சுனி, வி.பி. விகீஷ் ஆகியோர் இன்னும் போலீசிடம் சிக்கவில்லை. அவர்களை கைது செய்வதற்கான முயற்சியில் கேரள போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

முன்ஜாமீன் மனு ஒத்திவைப்பு

ஆனால் புல்சார் சுனி, வி.பி. விகீஷ், மணிகண்டன் ஆகிய 3 பேரும் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்தனர். அவற்றில் அவர்கள், தாங்கள் இந்த வழக்கில் தவறாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தாங்கள் ஏதுமறியாத அப்பாவிகள் என்றும் கூறி உள்ளனர்.

அந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது அந்த மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் 3–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மணிகண்டன்

ஆனால் இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் பிடிபட்டார். அவரிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

பாவனா கடத்தி, பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டதில் பெரிய அளவுக்கு சதியும் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடவுளாக இருந்தாலும்....

இந்த விவகாரத்தில் குற்றவாளி கடவுளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சட்டம் மற்றும் கலாசார துறை மந்திரி ஏ.கே. பாலன், கோழிக்கோட்டில் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.

மேலும் அவர், ‘‘இங்கே பட உலகில் சில மோசமான போக்குகள் நிலவுகின்றன. அவற்றை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சி எடுக்கப்படும். இந்த விவகாரத்தில், பட உலகினரின் உதவி நாடப்படும். அத்தகைய போக்குகளில் ஒன்றுதான் நடிகை மீதான பாலியல் தாக்குதல். இந்த சதியின் பின்னணியில் இருந்தவர்களை வெளியே கொண்டு வரவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன’’ என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பதுங்கலா?

இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தமிழ்நாட்டில் பதுங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் காரணமாக கேரள போலீஸ் படைகள் தமிழ்நாட்டுக்கு விரைந்து, தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


Next Story