கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்

சால்ட் லேக் ஸ்டேடியத்துக்குள் வந்த மெஸ்சியை ரசிகர்களால் பார்க்கக்கூட முடியவில்லை.
உலக வரைபடத்தில் கால்பந்து விளையாட்டு தடம் பதிக்காத நாடுகளே இல்லை. இந்தியாவில் கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் கால்பந்துக்கென்று தனிப்பெருமை உண்டு. கால்பந்து விளையாட்டின் சாதனை பக்கங்களை புரட்டிப்பார்த்தால் அதில் அர்ஜென்டினா நாட்டு வீரரான லயோனல் மெஸ்சியின் பெயர் எல்லா பக்கங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும். உலக கோப்பையை வென்ற மெஸ்சியின் விளையாட்டு ஸ்டைலே தனி. கால்பந்து உலகில் அவருக்கென்று தனி இடம் இருக்கிறது. அவர் அடையாத சாதனைகள் எதுவும் கால்பந்து விளையாட்டில் இல்லை. 38 வயதான மெஸ்சி கால்பந்து விளையாட்டின் ஜாம்பவனான மாரடோனாவின் வாரிசாகவும், சமகாலத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சரிநிகர் போட்டியாளராகவும் இருக்கிறார்.
5.7 அடி உயரமே கொண்ட அவர் மைதானத்துக்குள் இறங்கிவிட்டால், அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியாத வகையில் விளையாடுவார். அத்தகைய பேரும், பெருமையும் கொண்ட மெஸ்சி ‘கோட்’ அதாவது ‘கிரேட்டஸ்ட் இன் ஆல் த டைம்ஸ்’ என்ற பெயரில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். கொல்கத்தா, ஐதராபாத், மும்பை, டெல்லியில் அவர் ரசிகர்களிடையே தோன்றி கூடியிருந்தவர்களை மகிழ்விக்கும் வகையில் அங்கு சிறுவர்கள் மற்றும் விளையாட்டு அணியினருடன் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தங்கள் கனவு நாயகனை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் இருந்தும் நிறைய ரசிகர்கள் சென்றனர். டிக்கெட் கட்டணம் ரூ.4,500 முதல் ரூ.12 ஆயிரம் வரை இருந்தது. கருப்பு சந்தையில் இதைவிட அதிகமான விலையில் டிக்கெட் கட்டணம் எகிறியது.
கொல்கத்தாவில் முதல் நிகழ்ச்சி நடந்தது. மைதானத்தில் மெஸ்சி 2 மணி நேரம் இருப்பார், சுற்றிவருவார், காட்சி போட்டியிலும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தநிலையில் அவர் சால்ட் லேக் ஸ்டேடியத்துக்குள் வந்தவுடன் அவரை சுற்றி மந்திரிகள், உயர் அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தினரும் நின்றுகொண்டதால் ரசிகர்களால் மெஸ்சியை பார்க்கக்கூட முடியவில்லை. கேலரியிலும், நாற்காலியிலும் ஏறி நின்று பார்த்தும் அவரை காணமுடியவில்லை. மந்திரிகளும், மிக முக்கிய பிரமுகர்களும் ரசிகர்களாக இருப்பது தவறு இல்லை. ஆனால் ரசிகர்களை மறைத்துக்கொண்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல. ஒரே களேபரமாக கூச்சலும், குழப்பமுமாக இருந்த நிலையில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பதற்றமான சூழ்நிலை நிலவியதால் மெஸ்சியை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் 20 நிமிடத்திலேயே அழைத்து சென்றுவிட்டனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். கையில் கிடைத்த நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்கள், விளம்பர பலகைகள், தடுப்பு கம்புகள் உள்ளிட்டவற்றை மைதானத்துக்குள் நாலாபுறமும் வீசி எறிந்தனர். அந்த ஸ்டேடியமே போர்க்களம்போல மாறியது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பு ஏற்று அம்மாநில விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா செய்தது வரவேற்புக்குரியது. கொல்கத்தா நிகழ்வின் தொடர்ச்சியாக மெஸ்சி கலந்துகொண்ட ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடந்த நிகழ்ச்சிகள் கொல்கத்தா பாடத்தை கற்றுக்கொண்டதால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் அமைதியாக நடந்தது. கொல்கத்தா சம்பவத்துக்கு அங்கிருந்த வி.ஐ.பி. கலாசாரமும், சரியான திட்டமிடுதலும், கூட்ட மேலாண்மையும், நேர மேலாண்மையும், போதிய பாதுகாப்பும் இல்லாததுதான் காரணம். எதிர்காலத்தில் மக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகள் நடக்கும்போது கொல்கத்தாவில் மெஸ்சி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் பாடமாக இருக்கும்.



