நடிகைகளுக்கு பொது இடங்களில் ஏற்படும் பயம்


நடிகைகளுக்கு பொது இடங்களில் ஏற்படும் பயம்
x
தினத்தந்தி 26 March 2017 6:05 AM GMT (Updated: 26 March 2017 6:05 AM GMT)

நடிகைகள் படப்பிடிப்பு நடைபெறும் இடங் களில் பாதுகாப்பாக செயல்படுகிறார்கள். தனது ரசிகர்கள் மத்தியில் தேவதையாக வலம் வரு கிறார்கள்.

டிகைகள் படப்பிடிப்பு நடைபெறும் இடங் களில் பாதுகாப்பாக செயல்படுகிறார்கள். தனது ரசிகர்கள் மத்தியில் தேவதையாக வலம் வரு கிறார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் களது பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. பல நடிகைகள், பலவிதங்களில் காயம்பட்டிருக்கத்தான் செய்கிறார்கள்.

சில நடிகைகளின் கசப்பான அனுபவங்கள்!

‘காதல்’ சந்தியா:


“உடல்ரீதியாக மட்டுமல்ல, மனோரீதியாகவும் பெண்கள் சமூகத்தால் பாதிக்கப்படுகிறார்கள். நடிகைகளுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது என்றும் சொல்லிவிடமுடியாது. இதன் மூலம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக குறை சொல்லவில்லை. சில மனநோயாளிகள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் சிகிச்சை பெறவேண்டியவர்கள். ஒரு பெண், குறிப்பாக ஒரு நடிகையை தசை பிண்டமாக மட்டுமே பார்ப்பவர்கள் மனநோயாளியாகத்தானே இருக்க முடியும்?

ஆள் கூட்டத்திற்கு மத்தியில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்குமோ என்ற பயம் எனக்கு இப்போதும் இருக்கிறது. அதனால் ஆள் கூட்டத்தில் தனியாக நான் செல்வதில்லை. 16 வயதில் எனக்கு ஏற்பட்ட சம்பவம்தான் அந்த பயத்திற்கு காரணம்.

அப்போது நான் ‘காதல்’ சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தேன். அம்மாவும் அந்த இடத்தில் இருந்தார். ஒரு பள்ளியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. வகுப்பறை ஒன்றில் நானும், அம்மாவும் உட்கார்ந்திருந்தோம். ஷாட் ரெடியானதும் நான் கேமராவின் முன்னால் சென்றேன். நடித்து முடித்துவிட்டு நான் அம்மாவை நோக்கி செல்லும்போது தனியாளானேன். படப்பிடிப்பை பார்க்க வந்தவர்கள் என்னை சூழ்ந்துவிட்டார்கள். யாருடைய கையோ என்னை நோக்கி நீண்டுவந்தது. நான் கதறி அழுதபடி அம்மாவை நோக்கி ஓடினேன்.

அந்த சம்பவம் எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சமூகம் ஏன் ஒரு நடிகையை இப்படி பார்க்கிறது என்ற கோபமும் வந்தது. அதோடு பெரிய பயமும் மனதில் உருவாகிவிட்டது. பல மாதங்களாக அந்த பயம் என் மனதில் பதிந்து கிடந்தது. மீண்டும் அது போன்ற உபத்திரவம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் நான் ஆள் கூட்டத்தில் செல்லாமலே இருந்தேன். ஒரு பெண்ணை உபத்திரவம் செய்ய வந்த கைகள் நிச்சயம் ஒரு மனநோயாளியின் கையாகத்தான் இருக்கும். அவருக்கு சிகிச்சையோடு, தண்டனையும் வழங்குவதுதான் சரியாக இருக்கும். இயக்குனரும், படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களும் அந்த நபரைத் தேடி அலைந்தார்கள். ஆனால் அதற்குள் அந்த ஆள் தப்பிவிட்டார்.

திரை உலகத்தினுள் எனக்கு அதுபோன்ற மோசமான சம்பவம் எதுவும் ஏற்பட்டதில்லை. நல்ல குழுவினரோடு என் திரை உலக வாழ்க்கை தொடங்கியது. ஒரு குழந்தையைப்போல் அவர்கள் என்னை கவனித்துக்கொண்டார்கள். வெற்றியோடு என் பயணம் தொடங்கியது. நான் திடீரென்றுதான் கதாநாயகியானேன். அதனால்தான் எனக்கு மோசமான அனுபவம் எதுவும் கிடைத்ததில்லை என்று நினைக்கிறேன். ஆனால் நிறைய பேர் திரை உலகத்தினுள் தங்களுக்கு மோசமான அனுபவங்கள் கிடைத்திருப்பதாக சொல்வதை கேட்டிருக்கிறேன். இதை ஒரு நிமிடத்தில் நம்மால் இல்லாமல் ஆக்கிவிடமுடியாது. பாதுகாப்பாக இருக்க நம்மால் முயற்சிக்க மட்டுமே முடியும்.

இன்னொரு அனுபவம் எனக்கு சென்னையில் கிடைத்தது. ஷூட்டிங் முடிந்து, எனது அறைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தேன். பைக்கில் வந்த மூன்று பேர் வழிமறித்தார்கள். நிறைய குடித்திருந்தார்கள். நான் இறங்கி நடந்தால் மட்டுமே வழி விடுவதாக நிர்பந்தம் செய்தார்கள். நான் இறங்கவே இல்லை. டிரைவர் ஒருவழியாக பைக்கை இடித்துக்கொண்டு முன்னேறினார். சிறிது தூரம் அவர்கள் எங்களை பைக்கில் விரட்டிக்கொண்டே வந்தார்கள். கடைசியில் அவர்கள் சறுக்கி சாலையில் பைக்குடன் விழுந்தார்கள். அதனால்தான் தப்பிக்க முடிந்தது”

ரம்யா நம்பீசன்:

“நான் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நிறைய பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ‘நான் பிரபலமானவர். என்னை பலருக்கும் தெரியும். எனக்கு ஒருபோதும் எந்த தொந்தரவும் ஏற்படாது’ என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நாட்களுக்கு முன்பு என் தோழிக்கு நடந்த சம்பவத்தை கேட்ட பிறகு எப்போதும், எதுவும் நடக்கலாம் என்ற பயம் வந்துவிட்டது. உண்மையை சொன்னால் எனக்கு இப்போது பயணம் என்றாலே பயமாக இருக்கிறது.

எந்த பாதுகாப்பும் இல்லாத இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் எல்லோரது மனதிலும் வளர்ந்துவிட்டது.

கடவுள் அனுக்கிரகத்தால் எனக்கு சினிமாவுக்கு உள்ளேயோ, வெளியேயோ மோசமான அனுபவம் எதுவும் ஏற்பட்டதில்லை. இது சமூகத்தின் பாதுகாப்பால் நடந்ததல்ல, கடவுளால் நடந்தது. எனது தோழிக்கு கிடைத்த அனுபவத்தை கேட்ட பிறகுதான், நான் பயணம் செய்த பாதைகள் பலவும் ஆபத்தானவை என்பதை உணர்ந்தேன்.

பிரபலமாக இருப்பது பாதுகாப்புக்கு உகந்தது என்ற நம்பிக்கை தவறானது என்பதை நான் தெரிந்துகொண்டிருக்கிறேன். அந்த நம்பிக்கை தகர்ந்து போனது எனக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபோன்ற சம்பவம் எனக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற பயத்தோடுதான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் எப்படி அதை எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் நான் இப்போது பயணங்களுக்கு தயாராகிறேன்.

வெளிநாடுகளில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன. அந்த சட்டங்களுக்கு அங்குள்ள மக்களும் பணிகிறார்கள். இங்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினம். கண்டுபிடித்தாலும் எளிதாக அதில் இருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் இருப்பதால் எதுவும் நடக்கலாம். இந்த நிலை மாறவேண்டும். குற்றவாளி, சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க விட்டுவிடக்கூடாது.

எல்லா இடங்களிலும் கேமரா கண்கள் திறந்திருக்கின்றன. அதை அங்கீகரித்துக்கொண்டுதான் நாம் வாழ்கிறோம். நமது அறிவை பயன் படுத்தி குறிப்பிட்ட அளவு வரைதான் அதை கண்டறியமுடியும். ஆனால் அதையே நினைத்துக்கொண்டு வெளியே செல்லாமலும் இருக்க முடியாது.

சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் படங்கள் மற்றும் வீடியோக்கள் என்று குறிப்பிட்டு நிறைய வெளிவரு கின்றன. அதை பார்த்து ஆனந்தமடைகிறவர்கள் நிறையபேர் இருக் கிறார்கள். பெரும்பாலும் அதில் தோன்றுபவர்கள் நடிகைகளாக இருப்பதில்லை. யாருடைய படங் களாக இருந்தாலும் அவைகளை தவறான விதத்தில் சித்தரித்து வெளி யிடுவதை தடுக்கவேண்டும். கடுமையான தண்டனையும் கொடுக்கப்படவேண்டும். பெண்களை மதிக்கவேண்டும் என்பதை ஆண்களுக்கு அவர்களது வீட்டில் இருந்து சொல்லிக்கொடுக்கப்படவேண்டும்”

Next Story