இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்


இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்
x
தினத்தந்தி 26 March 2017 6:19 AM GMT (Updated: 26 March 2017 6:19 AM GMT)

இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும்.

ளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். அதனால் சோர்ந்துபோக வேண்டியதில்லை. பிரபலமான பல நடிகைகள் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று யாராவது யோசித்ததுண்டா? அவர்கள் என்றும் இளமையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை தீர்மானமாக எடுத்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆழ்மனது அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. அதுதான் உண்மை.

ஆமாம். நாம் இளமையாக இருக்க நம் மனம் தான் காரணம் என்கிறது ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள். அழகு சாதனங்கள் எதுவுமே நம் முதுமையை மறைக்க உதவாது. ஆனால் மனதிற்கு நாம் தரும் பயிற்சி நம்மை எப்போதும் இளமையாகவே வைத்திருக்கும். இதை அன்றும், இன்றும் பலர் நிரூபித்துக்கொண்டிருக் கிறார்கள். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் வாழ்ந்த பல யோகிகளும், சித்தர்களும் இந்த இளமை ரகசியத்தை கண்டுபிடித்து பலருக்கு தெரிவித்திருக் கிறார்கள். அந்தகால அரசிகள் ஆழ்மன தியானம், யோக கலைகளை பயின்று காலங்களை கடந்தும் இளமையாக வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் இளமை என்பது மனதின் வெளிப்புறத்தோற்றமே என்கிறார்கள். இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

இன்றைய சூழ்நிலையில் வேலைப்பளு, டென்ஷன், கோபம், உடல் உபாதைகள், சரியான தூக்கமின்மை போன்ற பல தொந்தரவுகள் மனித வாழ்க்கையை ஆக்கிரமித்துள்ளன. இளம் வயதிலே மனம் சோர்ந்தால் உடல் முதுமையாகிவிடும். மாசு நிறைந்த காற்று, ரசாயன உணவு, சுற்றுப்புறச்சூழல் மாசு இவை எல்லாம் மனிதர்களை இளமையிலே முதுமைக்கு வழிகாட்டுகின்றன. பணத்தால் இளமையை தக்கவைக்க முடியாது. மனதால்தான் முடியும்.

மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது யோகநிலையில் ஒன்று. மனதை ஒருநிலைப்படுத்தும் போது அமைதியடைகிறது. அமைதி நிம்மதியை கொண்டு வந்து சேர்க்கிறது. நிம்மதியான சூழ்நிலையில் பிரச்சினைகள் எளிதாக்கப்படுகிறது. எதிர்காலத்தைப் பற்றிய நல்ல சிந்தனைகளும் நம்மிடம் தோன்றுகிறது.

வயதைக் கடந்தும் இளமையாகத் தோன்றும் சில நடிகைகளின் கருத்துக்களை கேட்போமா!

ரவீணா தாண்டன்:


‘‘நான் திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தேனோ அதே போல இன்றும் இருக்கிறேன் என்று பலரும் என்னிடம் ஆச்சரியமாக சொல்கிறார்கள். நான் நடிகை மட்டுமல்ல. குடும்பத் தலைவியும் கூட. மற்ற குடும்பத் தலைவிகளுக்கு இருக்கும் அத்தனை பொறுப்புகளும், குடும்பப் பிரச்சினைகளும் எனக்கும் உண்டு. குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது, வீட்டை பராமரிப்பது என்று பல வி‌ஷயங்கள் இருக்கின்றன. இவ்வளவிற்கும் இடையே என்னையும் நான் இளமையாக பராமரித்துக் கொள்கிறேன்.

முறையான உடற்பயிற்சி, உணவு, யோகா என்று பல வி‌ஷயங்களை நான் என் வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டேன். நல்ல நினைவுகள்கூட ஒரு பயிற்சிதான். வேண்டாத சிந்தனைகளை நிறுத்தி அந்த இடத்தில் நம்பிக்கை தரும் நல்ல சிந்தனைகளை விதைக்க பழகிக்கொள்வேன். தினமும் எழுந்ததும் கண்களை மூடி அமைதியாக ‘எனக்கு இருபது வயது’ என்று பலமுறைகூறி, மனதில் பதிய வைத்துக்கொள்வேன். இரவு தூங்கச்செல்லும் முன்பும் அதையே சொல்வேன். அது தான் இன்றுவரை என்னை இளமையாக வைத்துக்கொண்டிருக்கிறது. இதை ஒரு யோகி எனக்கு கற்றுக்கொடுத்தார்.

ஆழ்மனப் பதிவு ஒருபோதும் வீண் போவதில்லை. இதை நான் பலரிடம் சொல்லிவிட்டேன். பலர் நம்பவில்லை. பலருக்கு புரியவில்லை. புரிந்துகொண்டு செயல்பட்டால் என்றும் இளமையாகத்திகழலாம்.

ஸ்ரீதேவி:

‘‘பொதுவாகவே குடும்பத் தலைவிகளுக்கு இளமையும், அழகும் இரண்டாம்பட்சமாகிவிடுகிறது. நான் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோலவே, எனக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன்.

மனம் என்பது நம் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி படைத்தது. அந்த சக்தியை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இன்றும் எனக் கான உடைகளை நானே டிசைன் செய்துகொள்கிறேன். இளமையாக சிந்திக்கிறேன். இளமையாக இருக்கிறேன். இதுதான் என் இளமையின்
ரகசியம்’’

மாதுரி தீட்சித்:

‘‘சினிமாத் துறைக்கு வந்தபிறகு அழகும், இளமையும் முக்கியத்துவம் பெறுகிறது. மற்றவர்களை விட சினிமா நட்சத்திரங்கள் இளமையாக இருக்க அதிகம் விரும்புவார்கள். சினிமாவை விட்டு விலகிய பிறகும் இளமை நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

நான் ஒரு தாய் என்ற முறையில் பல பிரச்சினைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியுள்ளது. இடையில் என்னையும் கவனித்துக் கொள்கிறேன். திடீரென்று ஒருநாள் இளமை போய்விட்டதே என்று வருத்தப்பட்டு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. நம் இந்தியப் பெண்கள் பெரும்பாலும் தங்களை கவனித்துக்கொள்வதில்லை. மனதை பல்வேறு பிரச்சினைகளால் நிரப்பி, சோர்ந்து போகிறார்கள். நாம் சோர்ந்து போவதால் பிரச்சினைகள் தீர்ந்துபோவதில்லை. மனதை சோர்ந்து போகாமல் பார்த்துக்கொண்டால், இளமையை தக்கவைத்துக்கொள்ள முடியும்’’

Next Story